வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 13….
பதிவுகளின் சின்னம் :
மனிதனுக்குப் பாவப்பதிவுகள் என்று இருந்தால் எப்படி அதைக் கண்டு பிடிப்பது ? அதனுடைய அடையாளம் என்ன என்றால் “உள்ளத்திலே களங்கம் உடலிலே நோய்” இதுதான் பாவப் பதிவுகளுடைய அடையாளம்.
சில சமயம் உடலிலுள்ள நோய்கள் வெளியில் தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் என்னிடம் எந்தப் பாவமும் இல்லை, பதிவும் இல்லை, நோயும் இல்லை என்று எண்ணிக் கொள்ள முடியாது.
ஒரு செடி வளர்கிறது, வளரும் போதே அதில் இவை, பூ, காய், பழம் பார்க்க முடியுமா என்றால் முடியாது. ஆனால், அதிலே எல்லாம் அடங்கியிருக்கிறது. அந்தந்த பருவம் வரும்போது தான் அதன் இலை, பூ, காய் தெரியவரும். அதே போல நம் உடலிலுள்ள பழிச்செயல் பதிவுகள் கூட அந்தந்த காலத்திலே அந்தந்த வயதிலே, அந்தந்தத் தொடர்பு வரும்போது தான் அது துன்பமாகவோ, நன்மையாகவோ தெரியவரும்.
பாவப் பதிவுடைய சின்னம் தான் இந்த உடலே என்றாலும் இத்தகைய வினைகளிலிருந்து விடுதலை பெற்று வினைத்தூய்மை, மனத்தூய்மை பெற்று இறைவனோடு கலக்க வேண்டும் என்ற சிந்தனை பெரும்பாலோருக்கு உள்ளது. அதற்கு மன உறுதியும் விழிப்பு நிலையும் பெறுவதற்கு ஒரு பயிற்சி முறையாகத் தேவை. அதற்கு குண்டலினி யோகமோ அல்லது வேறு ஒரு தியான முறையோ பழகினால் தான் மனவலிவும், விழிப்பு நிலையும், பொறுப்புணர்ச்சியும் ஏற்படும். அதன் பிறகு அன்றாட வாழ்வில் நமது மனம், மொழி செயல்களை நலம் தரும் முறையில் திட்டமிட்டவாறு செயல்படுத்தலாம்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
மகரிஷியின் அருட்பணி:-
அன்பின் அழைப்பு :
“பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலையறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்
துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்”.
அருட்பணி:
“அருள் ஓங்கி உலகெங்கும்
அமைதி நிலவவேண்டி
அருள் வேட்கைக் கொண்டோர்க்கு
அவர் தகுதியைக் கணித்து
அருள் விளக்கும் வாசலதை
அன்பாய்த் தொட்டுத் திறந்து
அருள் விளங்கச் செய்யும் ஒரு
அருட்பணியை மேற்கொண்டேன்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.