x

அக்டோபர் 11 : உடலோம்பல் இறைவழிபாடு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
அக்டோபர், 11….
உடலோம்பல் இறைவழிபாடு :
“இவ்வளவு சாப்பிட்டால் போதும், நன்கு ஜீரணமாகும். உடல் நன்றாக இருக்கும் என்று தெரிந்து அளவோடும் முறையோடும் சாப்பிடுவோம். ஆனால் சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டால் அதை ஜீரணிப்பதற்கு வேண்டிய அதிகப்படியான அமிலம் எங்கிருந்து சுரக்கும்? பற்றாக்குறையின் காரணமாக உணவு செரிக்காமல் தேங்கிப் போவதால் புளித்துப் போகிறது. அது வயிற்றில் புண்ணை உண்டாக்கி துன்பம் தருகிறது. மனிதன் அறியாமையும் அதனால் செய்யும் தவறுகளும் தான் துன்பமாக விளைகிறது. இறையாற்றலால் எல்லாம் சரியாக நடக்கிறது. ஆனால் நாம் ஆசையினால், மறதியினால் இறைவனின் செயலை மறந்ததினால் அதிகமாகச் சாப்பிட்டேன். இறைவன் செயலில் குறுக்கிட்டேன். உறுப்பு கெட்டுவிட்டது. அதன் விளைவாகத் துன்பத்தை அனுபவிக்கிறேன்.
இறையருள் எல்லாச் செயலிலும் கலந்து சரியான பலனைத் தந்து கொண்டே இருக்கிறது. நாம் அதைத் தடுத்தால் அந்தத் தடைக்குத் தகுந்தவாறு துன்பம் வரும். இதைத் தெரிந்து கொண்டால் இறைவனுக்குப் பயந்து நடக்க வேண்டுமென்று முன்னோர்கள் சொன்னது தவறா? தவறாகச் செய்தால் துன்பந்தான் வரும். சரியாகச் செய்தால் இன்பமே நிலைக்கும். இந்த உண்மையைத் தெரிந்து கொள்கிற போது இறையுணர்வு வருகிறது. அதற்கு ஏற்றவாறு இந்த உடலுக்கு உணவு, ஓய்வு, உடலுறவு, எண்ணம், உழைப்பு இந்த ஐந்தையும் அலட்சியம் செய்யாமல் அதிகமாக அனுபவிக்காமல் முரணாக அனுபவிக்காமல் நாம் பார்த்துக் கொள்வோம். உடல் நலமாக இருக்கும். மனமும் அமைதியாக இருக்கும். அப்படி அறிவின் தெளிவோடு உடலை நலமாக வைத்துக் கொள்வதும் இறைவழிபாடு தானே?”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“உள்ளத்தின் களங்கமாகிய நோய்களும்
உயிரின் களங்கமாகிய வாழ்க்கைச் சிக்கல்களும்
கவலையாக மாறுகிறது.”
“ஆகாசம் உயிராக இருக்கிறது.
அது உடலில் இயங்குவதால் உடலுக்கு ஒரு
காந்த இயக்கம் கிடைக்கிறது”.
“ஒரு குழந்தையின் உற்பத்தியானது
பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின்
தரத்திற்கு ஏற்றவாறு தான் அமையும்”.
சிறியது உடல் பெரியது மெய் :-
“பெற்ற உடம்பின் பயனாய் ஊறுமுதல் ஐந்து
புலன்மூலம் அனுபவித்தல் சிற்றின்பமாகும்;
நற்றவத்தால் உயிரறிந்து அறிவறிந்தபோது
நாம் பிறவி எடுத்தபயன் பேரின்பமாகும்;
சிற்றின்பம் இன்றிப் பேரின்ப மென்பதில்லை,
சிறியதுடல் பெரியது மெய் சீவன் சிவன் உண்மை
பற்றின்றி வாழவில்லை அளவுமுறை கண்டால்
பற்றற்ற வாழ்வாகும் பகுத்துணர்வோம் நாமே”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


Like it? Please Spread the word!