மே 25 : நிறைவான வாழ்வு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


நிறைவான வாழ்வு :

வினா : “தவத்தினால் வாழ்வு ஒளிவிடும் என சுவாமிஜி கூறுகிறார்கள். தவம் செய்து ஊழினை மாற்றி அமைக்க முடியுமா? தவம் இயற்றுபவர்கள் எல்லோருமே நிறைவான வாழ்வு வாழ்கிறார்களா?

விடை : தவத்தினால் வாழ்வை ஒளிமயமாக்கிக் கொள்ள முடியும் இதற்குச் சான்றாக

“ஊழையும் உப்பக்கம் காண்பார் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்”.

என்னும் குறட்பாவே போதுமானது. விதியை மதியால் வெல்லலாம் என்னும் பழமொழியையும் நினைத்துப் பாருங்கள். மதி என்பது அறிவு. தவம் செய்வதினால் வலிமையும், கூர்மையும் மதிபெறும். அத்தகு மதியானது இனி ஆற்ற இருக்கும் செயல்களை ஒழுங்குபடுத்தி வாழ்க்கையில் இது வரை கிடைக்காத வெற்றியையும் மேன்மையையும் ஏற்படுத்தித் தரும்.

தவம் செய்பவர்கள் முறையாகவும் தொடர்ந்தும் செய்து வருவதோடு நமது மனவளக்கலை மன்றத்தில் மட்டும் போதிக்கப்படும் தற்சோதனை பயிற்சிகளையும் சேர்த்துச் சிரத்தையோடு செய்து வருவார்களானால் தங்களது இயற்கை சுபாவங்களை மாற்றி அமைக்கும் குணநலப்பேற்றை எய்த முடியும். நிறைவாக முழுமைப் பேற்றையும் எய்தலாம். நீங்கள் கேட்கக்கூடிய நிறைவான வாழ்வும் அதுவே. அத்தகு மேம்பட்ட வாழ்க்கையினை நமது மன்றத்தினர் அனேகம் பேர் அடைந்திருக்கிறார்கள்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * *

“ஞானம் பெற தவம்,

தவத்தைப் பெற குரு”.

“அறிவை ஏடுகளில் பெறலாம்

ஞானத்தை தவத்தால் பெறலாம்”.

“அறிவு என்பது அறியப்படுவது

ஞானம் என்பது உணரப்படுவது”.

“அறிவாளிகள் மதிக்கப்பட வேண்டியவர்கள்

ஞானியர்கள் துதிக்கப்பட வேண்டியவர்கள்”

“ஆறாவது அறிவைக் கொண்ட இந்த மனிதனின் வாழ்வின் நோக்கம், அறிவு

முழுமை பெறவேண்டும்”.

“உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்

உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி

மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்

மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க

ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்

ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு


செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்

சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மே 26 : தவமா? தற்சோதனையா? எது எதற்கு உதவுகிறது ?

PREV      :   மே 24 : முன் ஏழு பிறவி பின் ஏழு பிறவிகள்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!