மே 16 : இனிமை கெடாத வாழ்வு

மே 16 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


இனிமை கெடாத வாழ்வு :
.

“வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.
.

1) பேராசை

2) அறியாமை

3) தப்புக் கணக்கு

4) விழிப்பின்மை

5) பகை

6) இயற்கைச் சீற்றம்
.

ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன. ஏமாற்றத்தின் அளவுக்கேற்ப அதிர்ச்சியும் துன்பமும் விளையும். அவ்வப்போது ஈடு செய்துவிடக் கூடிய சிறு சிறு ஏமாற்றங்களும் உண்டு. நீண்ட நாட்களுக்குத் துன்பம் தொடரக் கூடிய ஏமாற்றங்களும் உண்டு. வாழ்நாள் முழுவதிலும் கூட ஈடு செய்துவிட முடியாத ஏமாற்றங்களும் உண்டு.
.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக் கூடிய சிந்தனையும் அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், அசிரத்தை, சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும் போது கவலை வரும்.
.


சிந்தனையோடு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவை செயலுக்கு கொண்டு வரும் திறமும், துணிச்சலும் வேண்டும். இத்தகைய சிந்தனையும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வும், வாழ்க்கை முறையும் மனிதனின் வாழ்வில் வெற்றியையும், அமைதியையும் தரும்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * *
.

“எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றம் அடைவதனால்
நாமே எல்லோரையும் எதிரிகளாக மாற்றிக் கொள்கிறோம். யாரைப் பார்த்தாலும் விரோத மனப்பான்மை உண்டாகும்”.
.

“உடல் உயிர் அறிவு எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கின்றன? இவற்றிற்கெல்லாம் உள்ள தொடர்பு என்ன? என்பதையெல்லாம் உணர்ந்து கொள்ள ‘மனவளக்கலை’ பயிற்சி வேண்டும்”.
.

எண்ணத்தின் சிறப்பு :

“எண்ணம்சொல் செயல்களெல்லாம் ஒன்றுக்கொன்று
இணைந்துள்ள தன்மையதைக் காணும்போது
எண்ணமே அனைத்துக்கும் மூலமாகும்
இன்பதுன்பம் விருப்பு வெறுப்பு உயர்வு தாழ்வு;
எண்ணத்தின் நாடகமே, பிரபஞ்சத்தின்
இரகசியங்கள் அனைத்துக்கும் ஈதே பெட்டி;
எண்ணமே இல்லையெனில் ஏதுமில்லை
எண்ணத்துக் கப்பாலும் ஒன்றுமில்லை.”
.

“மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயை ஆம்
மனம் உயிர் வெளியினில் மருவித் தோய்ந்திட
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Like it? Please Spread the word!