வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
மறைபொருள் சுரங்கம் :
“மனவளம் என்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையா வாழ்க்கை நியதியாகும். இயற்கையில் அமைந்துள்ள மறைபொருட்கள் எண்ணில் அடங்கா. அவையாவும் உடலுக்கும் உயிருக்கும் இடையே, உயிருக்கும் மனதுக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற உயிர்களுக்கும் இடையே, ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் இடையே, தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் இடையே, மனிதனுக்கும் விரிந்த பேரியக்க மண்டலத்துக்கும் இடையே, மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடையே மனித மனத்தின் மூலமே வெளிப்படுகின்றன.
இத்தகைய கோடிக்கணக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் மனித மனத்தால் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் எனும் உணர்வுகளால் ஏற்றுக்கொள்ளப் பெற்று கருவழியாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மறை பொருள் சுரங்கம் தான் மனித மனம். மனித மனதின் தொடக்கம், எல்லாம் வல்ல காலம் கடந்த எல்லையற்ற மெய்ப்பொருளேயாகும் . அதன் இயக்கங்கள் பேரியக்க மண்டல உணர்வுகள் அனைத்தும் ஆகும். அதன் முடிவோ உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுடைய மனமேயாம்.
இத்தகைய பேராற்றலுடைய மனதைப் பெற்ற மனிதன் அதன் மதிப்பை உணர வேண்டும். ஆக்க முறையில் அம்மனதைப் பண்படுத்த வேண்டும். பயன் கண்டு பேரின்ப நிலையிலே வாழ வேண்டும். இந்த மதிப்புள்ள தகுதியை மனிதன் பெற ஏற்ற திட்டமிட்ட கலைதான் “மனவளக்கலை”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * *
“மனம் நிறைந்த நிலத்தில் எது போட்டாலும் விளையும்.
ஆனால் எது போட வேண்டும் என்று சிந்தித்து போட வேண்டும்”.
“விளைவறிந்து, நலமுணர்ந்து நல்ல நாட்டத்தோடு
எண்ணம், சொல், செயல்களைப் பயன்படுத்தும்
கலையே தற்சோதனை”.
“குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்
குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்
மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று
மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்
இறைவனது திருநிலையில் இணையும் அப்போ
இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து
நிறைவு பெரும் தீய வினையகலும் வாழ்வில்
நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்”
“இறைநிலையே அறிவாக இருக்கும் போது
இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி
குறை போக்கப் பொருள்,புகழ்,செல்வாக்கு வேண்டி
கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;
நிறைநிலைக்கு அறிவு விரிந்துண்மை காண
நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று,
முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற
முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : மே 06 : மனம் வெளுக்கும் மருந்து
PREV : மே 04 : அறுகுணச் சீரமைப்பு