மே 04 : அறுகுணச் சீரமைப்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


அறுகுணச் சீரமைப்பு :

“அறுகுணம் என்பது காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற பெயர்களில் வட நூலார் குறிப்பிட்டுள்ள ஆறுவகை மனோ நிலைகள். இவை தமிழ் மொழியில் முறையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு-தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என விளக்கப்படுகின்றன.

இவை எல்லா உயிர்களிடத்தும் அமைந்துள்ளன. மனிதனிடம் இந்த மனோ நிலைகள் எழுச்சி பெறும்போது தீய செயல்களைச் செய்து விடுவான். அதனால் பொருள் அழிவும், மகிழ்ச்சி இழப்பும் விளையும்.

தெளிந்த அறிவோடும், விழிப்போடும் இருந்தால் இந்த ஆறு மனோ நிலைகளில்

பேராசை – நிறை மனமாகவும்;

சினத்தைப் – பொறையுடைமையாகவும்;

கடும்பற்றை – ஈகையாகவும்;

முறையற்ற பால் வேட்பைக் – கற்பாகவும்;

உயர்வு தாழ்வு மனப்பான்மையை – நேர்நிறையுணர்வாகவும்;

வஞ்சத்தை – மன்னிப்பாகவும்

சீரமைத்துக் கொள்ளலாம். தனக்கும் பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும், அறிவிக்கும், உடல் உணர்ச்சிக்கும் வருத்தம் எழாத அளவிலும், முறையிலும் செயலாற்றி இன்பமாக வாழலாம்.

தேவையும், பழக்கமும் சூழ்நிலைகளும் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுகின்றன. அனுபவ நினைவுகளும் சிந்தனையும் தெளிவும் அளிக்கின்ற நல்ல முடிவைக் கொண்டு உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறனே ‘அறிவு’ எனப்படும். உணர்ச்சிகளால் அறிவு மயங்கித் தனது நிலை மறந்து செயலாற்றினால் அதனை ‘மயக்கம்’ அல்லது ‘மாயை’ என்று கூறுகிறோம். அறிவு நிலை குலைந்த மயக்கத்தில் தான் தீய செயல்கள் விளைகின்றன.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“எல்லையில்லா இறைநிலையைப் போல

எல்லை இல்லாத தெய்வத்தன்மை வாய்ந்தது பொறுமை”

“சினத்தினால் திருத்தம் வரவே வராது.

சினத்தினால் ஏதாவது வரும் என்றால்

அங்கு வருத்தம் தான் வரும்”..

சீரமைக்கப்படாத ஆறு குணங்களின் உணர்ச்சிவயத்தால் உடலில் உண்டாகும்

நோய்கள் பற்றி விளக்கும் மகரிஷியின் கவி:-

அறுகுண விளைவுகள் :

“உளவியலை ஆராய்ந்தால் அறு குணங்கள்

உடலில் நோய்பல விளைத்தல் அறிந்து கொள்வோம்.

அளவிலா விருப்பு கடும்பற்றிரண்டும்

அல்லல் தரும் குன்ம நோய் உண்டுபண்ணும்;


பிளவு செய் சினம் குருதி அழுத்தம், மார்நோய்

பித்து, புண், கண்நோய்கள் தாது மூளை

வளமழிவு செய்யும்; மிகை மோகம் குட்ட

வகை கண்நோய்கள், நீரிழிவு செய்யும்; வஞ்சம்

உள அகைதி உடல் வலுவு போக்கி மார் நோய்

உண்டாக்கும் தொடர்புநோய் பலவும் காட்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மே 05 : மறைபொருள் சுரங்கம்

PREV      :   மே 03 : நால்வகை ஆற்றல் வரவு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!