மே 02 : கவலை ஏன்?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


கவலை ஏன்?

“பொருள், புகழ், செல்வாக்கு, புலனின்பம் என்பனவற்றில் பேராசை கொண்டு, கற்பனையால் சில வரவுகளை எதிர்பார்ப்பார்கள் அல்லது பிறரிடம் இருந்து கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். செயலுக்குத் தக்க விளைவு என்பது இறையாற்றலின் திருவிளையாடலாக இருக்கிறது. இந்த உண்மையறியாமல் செயலின்றி கற்பனையால் ஒரு விளைவை எதிர்பார்ப்பதும், கடமைக்கும் உறவுக்கும் பொருந்தாமல் பிறரிடமிருந்து ஒன்றை எதிர்பார்ப்பதோ அல்லது ஆசையின் பெருக்கத்தால் அளவுக்கதிகமாக எதிர்பார்ப்பதோ வெற்றியடைவதில்லை. இது இயற்கை நியதி. சிந்தனையின்றி இயற்கையின் நியதிப்படி அமைந்த விளைவுகளை ஏற்றுக் கொள்ளாமல் எதிர்பார்த்த ஆசையையும் அப்படியே வைத்துக் கொண்டு, ஏமாற்றத்தையும் ஒப்புக்கொள்ளாமல், ஏற்படும் மனப் பிணக்குதான் கவலை.

இங்கு கடமைகளை ஒட்டி செயல்களையொட்டி திட்டமிட்ட விளைவுகளை எதிபார்ப்பது தவறாகாது. இது கடமையைச் சார்ந்ததாகும். கற்பனை எதிர்பார்ப்பும் நீதியான தோல்வியும் பற்றியே இங்கு சிந்திக்கிறோம். தோல்வி தான் இயற்கை நீதியென்று ஒப்புக் கொண்டால் தனது தவறு என்ற கற்பனை எதிபார்ப்பு கலைந்து போகும். இந்த இரண்டையுமே ஒன்றோடு மற்றொன்றைச் சேர்க்காமல் வைத்துக் கொண்டு இரு நினைவுகளுக்கு மத்தியிலே மனதை வைத்துக் கொண்டு வருந்துவது தான் கவலை. எனவே ஒருவர் படும் கவலையும் உள் ஒன்றிருக்கப் புறம் ஒன்று நினைக்கும் பொருந்தா மன நிலையே. இந்நிலையும் அறிவின் வளர்ச்சியை தடுக்கும்.

அறிவின் வளர்ச்சியுடைய உயிர்தான் ஆக்க வாழ்வு பெறமுடியும். அறிவின் மதிப்பு குறையாமல் உயிர் போனாலும் சரி அதை ஏற்றுக்கொள்வோம். அறிவு கெட்டு உயிர் நீடித்து பயனில்லையென்பது அறிஞர் கண்ட தெளிவு.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

“கவலை இல்லாத மனிதன் உலகில் உண்டு, ஆனால்

சிக்கல் இல்லாத மனிதன் உலகில் இல்லை”.

“தப்புக் கணக்கிட்டுத் தானொன் றெதிர்பார்த்தால்

ஒப்புமோ இயற்கைவிதி? ஒழுங்கமைப்புக் கேற்றபடி

அப்போதைக் கப்போதே அளிக்கும் சரிவிளைவு.

எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவார் இதைஉணரார்”

“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப்போக்க

வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம்காத்து


எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்

இன்பமே மிகுதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : மே 03 : நால்வகை ஆற்றல் வரவு

PREV      :  மே 01 : ஆக்கத்துறை

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!