மே 01 : ஆக்கத்துறை

மே 01 : வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


ஆக்கத்துறை :
.

“உங்களுக்குக் கிடைக்கக்கூடிய பாக்கியம் எல்லாம் முன்னே நீங்கள் இதுவரை செய்த வினையின் விளைவு, செயலின் விளைவு, என்று தெரிந்து கொண்டு அதனுடைய பயனாக இனிமேல் நல்ல காரியங்களையே செய்வோம் என்று எண்ணிக்கொண்டு நலமுள்ள காரியத்தைச் செய்வேன், நலமுள்ள காரியத்தை நினைப்பேன், அதற்கு என்னுடைய ஆற்றல் முழுவதும் உடல்சக்தி முழுவதும் செயல்படட்டும் என்று எண்ணினீர்களானால் அதுதான் Positive thinking, positive side.
.

Positive side என்றால் தமிழில் “ஆக்கத்துறை” என்று பெயர். Negative என்றால் முறித்தல் எதிர்த்தல் என்று பொருள். எதிர்ப்பின்றி “ஆக்கம்” என்றால் மேலும் மேலும் நலன் அளிக்கக் கூடியதுதான் அந்த ஆக்கம். அந்த முறையிலே நீங்கள் எப்படி எண்ணுகின்றீர்களோ அப்படித்தான் நலம் விளையும்.
.

ஆகவே, எல்லோரும் எண்ணத்தை நல்லதாக்கிக் கொண்டு வரவேண்டும். பிறர்க்கு உதவி செய்வேன், ஒவ்வொருவருக்கும் என்னால் இயன்றதைச் செய்து கொண்டே இருப்பேன், என்று சொல்லும் போது அது ஊற்று மாதிரியாகவே வற்றாது சுரக்கும்.
.

அவ்வாறு பிறர்க்கு உதவி செய்யும் போது எங்கிருந்து செய்யப் போகிறீர்கள்? இருப்பிலிருந்து தான் கொடுக்கிறோம், இருப்பதைத் தான் செய்கிறோம். அங்கே இல்லையானால் செய்ய முடியாதல்லவா? ஆகையினால் செய்யச் செய்ய வந்து கொண்டேதான் இருக்கும். நல்ல முறையிலே அது வளர்ந்து கொண்டே தான் இருக்கும். எப்பொழுதும் அந்த மெய்யுணர்வு வந்துவிட்டது என்றால், மெய்யுணர்வினை பயன்படுத்துவோம் என்றால் சேவையிலே நிறைவு வரும், வாழ்விலும் ஒளி பெருகும்.
.


மனிதன் நல்ல எண்ணத்தோடு முயற்சியோடு ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் பத்து அடி எடுத்து வைப்பான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதன் பொருள் என்ன என்றால் நீங்கள் உங்களுடைய மனம் நாடினால் போதும். Fraction demands and Totality supplies. ஏனென்றால் அங்கு தான் இருப்பு இருக்கிறது. நான் யாரிடமும் எதையும் எதிபார்க்கமாட்டேன் என்ற நிலைக்கு வந்தோமானால் என்ன ஆகும்? நல்ல எண்ணம், மனத் தூய்மை, கொண்ட ஒருவர் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் என்னைக் கவனித்துக் கொள்வான் என்றிருந்தால் அவரது தேவையை நிறைவேற்ற உதவிகள் எல்லாத் திசையிலிருந்தும் வந்து சேரும்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * *
.

சிறந்த கலாசாலை :

“உலகமே ஒரு பெரிய பழைய பள்ளி,
ஒவ்வொருவருக்கும் தினம் புதிய பாடம்,
பலகலைகள் கற்றோர்க்கும் பாமரர்க்கும்,
பகிர்ந்து தரும் இன்பதுன்பம் எனும் பரிசு.”
.

அறிவின் வளர்ச்சி :

“அறிந்த அனைத்தையும் அறிவித்தோர் இல்லை
அறிவித்த அனைத்தையும் அறிந்தோரும் இல்லை;
அறிந்த பலரிடம் அறிந்ததும் அனுபவ
அறிவும் இணைந்ததே அறிவின் வளர்ச்சியாம்.”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Like it? Please Spread the word!