மார்ச் 31 : விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


 

விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் :

உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் ஐந்து விளைவுகளுக்கும் மூலமானதும், மெய்ப்பொருளானதும், காலம், தூரம், பருமன், வேகம் எனும் கணிப்புக்கு அப்பாற்பட்டதும் ஆகிய மெய்ப்பொருளினைப் பற்றியும், ஐயுணர்வுகளாகவும் சிந்தனை ஆற்றலாகவும் உள்ள அறிவைப் பற்றியும் உணர்ந்து கொள்ளும் தெளிவு மெய்ஞ்ஞானம்.இயக்கத்தைக் கண்டது விஞ்ஞானம். இயக்க மூலத்தை உணர்ந்தது மெய்ஞ்ஞானம்.

உடலை வளர்ப்பதும் அதை அழகுபடுத்துவதும் விஞ்ஞானம். உள்ளத்தை மேன்மையாக்குவதும், தூய்மையாக்குவதும் மெய்ஞ்ஞானம்.
வாழ்வில் சிறப்பளிப்பது விஞ்ஞானம். வாழ்வில் அமைதி தருவது மெய்ஞ்ஞானம்.

இயங்கி அறிவது விஞ்ஞானம். நிலைத்து உணர்வது மெய்ஞ்ஞானம்.
வாழ்வின் முன்னேற்றம் “விஞ்ஞானம்” வாழ்வின் சீர்திருத்தம் “மெய்ஞ்ஞானம்”.

வாழ்வை வளப்படுத்தும் ஒரு உயர்நிதி விஞ்ஞானம். அந்த நிதியைப் பாதுகாக்கும் பெட்டகம் மெய்ஞ்ஞானம்.துணைக்கருவிகளைக் கொண்டு உடல் கருவிகளை ஆற்றல்களைப் பெருக்கிவருகிறது விஞ்ஞானம். உடற்கருவிகளை திறமையோடு ஆற்ற அறிவை முழுமையாக்குகிறது மெய்ஞ்ஞானம்.

மனிதனுக்கு களிப்பூட்டவல்லது விஞ்ஞானம். அக்களிப்பு சலிப்பாக மாறாமல் அளவு கட்டிக்காவல் புரியவள்ளது மெய்ஞ்ஞானம்.
மெய்ஞ்ஞானத்தோடு இணைந்த விஞ்ஞானம் வாழ்வின் நலம்காக்கும். மெய்ஞ்ஞானத்தைப் புறக்கணித்த விஞ்ஞானம் வாழ்வின் வளமழிக்கும்.
மறைபொருள் விளக்கம்தான் மெய்ஞ்ஞானம். உருப்பொருள் விளக்கம் தான் விஞ்ஞானம்.

அறிவைப் பற்றி, உயிரைப் பற்றி, உயிருக்கும் மூலமெய்ப்பொருளைப் பற்றி அறிந்து கொள்வது மெய்ஞ்ஞானம். உடலைப் பற்றி, உலகைப் பற்றி அறிந்து கொள்வது விஞ்ஞானம்.அறிவின் சிறப்பு மெய்ஞ்ஞானம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

 

“விஞ்ஞானம் விளக்கைப் போல் இயற்கையில் நிகழ்ந்திடும்

விந்தைகளை மக்களுக்கு வெளிப்படுத்தும் ஒளியென்றால்;

மெய்ஞ்ஞானம் சூரியன் போல் எங்கும் எக்காலத்தும்

மேல் நிலையை அறிவெய்த மிகச் சிறந்த ஒளியாகும்”.

“அஞ்ஞானம் அறிவினது ஆரம்ப நிலையாகும்.

விஞ்ஞானமோ அறிவின் வேகநிலை,

மெய்ஞ்ஞானம் அறிவதனின் பூரணமாம்,

இஞ்ஞானம் மூன்றும் இயற்கையின் எண்ண நிலை”.

“விஞ்ஞானம் சிறப்புற்று விண் வெளியுணரப் பெற்றால்


அஞ்ஞானம் மறைந்து விடும் அன்பும் அருளும் பொங்கி

மெய்ஞ்ஞானம் ஒளி வீசும் மெய் உயிர் அறிவறிவு

இஞ்ஞால முழுமைக்கும் ஏற்றமுறும் இன்பமே”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 01 : சிந்தனைத் திறன் வளர

PREV      :  மார்ச் 30 : நற்பண்பு காக்க

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!