பிப்ரவரி 28 : மௌன நோன்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மௌன நோன்பு:

பொதுவாக மவுன நோன்பில் இருவகை உண்டு.
1]. ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டுமென்று மன உறுதியோடு சங்கற்பம் செய்து கொண்டு அவ்வேலை முடியும் வரையில் பேசாமல் இருப்பது. இது மனதையும் உடலாற்றளையும் சிதறாமல் காத்து, தான் விரும்பும் செயலை வெற்றியோடு முடிக்கத் துணை செய்யும்.

2]. ஆன்ம தூய்மைக்காக குறிப்பிட்ட காலத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு, குடும்பம், பொருளாதாரம், வாணிபம் இவைகளிலிருந்து விலகிக் கொண்டு மௌனமாக இருந்து அகத்தாய்வு செய்து கொள்ளுதல். இந்த இருவகை மௌன நோன்பு தான் நல்ல நோக்கத்தோடு பயன் விளைக்கத் தக்க வகையில் திட்டமிட்டு ஆற்றுவதாகும்.

குண்டலினி யோகத்தில், துரியாதீத தவம் ஆற்றும் போது புலன்கள், அறிவு, இச்சைகள் அனைத்தையும் அடக்கி, அறிவை இருப்பு நிலையான சிவமாக்கிக் கொண்டு பேச்சற்று இருக்கின்றோம். இது மவுன நோன்பில் சேராது. இது அறிவின் இயக்கத்தைச் சீரமைக்க நாள்தோறும் சிறிது நேரத்தை ஒதுக்கிக் கொண்டு குறுகிய கால அளவில் செய்யும் உளப்பயிற்சி ஆகும்.

நான் பேசாத போது இறைவன் பேசிக்கொண்டிருக்கிறான் என்பது அறிவறிந்தோர் காட்டும் குறிப்பு. நாம் பேசாமல் இருக்கும்போது கண்களை மூடிக்கொண்டு அமர்ந்து கொண்டால் எத்தனை, எத்தனை எண்ணங்கள் எழுச்சி பெற்று உணர்த்துகின்றன. இந்த எண்ணங்கள் நீங்கள் உண்டு பண்ணுகிறீர்களா? நாம் உண்டு பண்ணுவதும் இல்லை. அது நம் விருப்பத்துக்கு அடங்குவதும் இல்லை.

பின்னர் நமது எண்ணங்களை நமது உள்ளங்களிலிருந்து அலையலையாக எழுப்பிக் கொண்டிருப்பது யார் வேலை? யாருமில்லை. இறைவனே தான். எவ்வாறு? உடல் உறுப்புகளின் மூலம் உணரும் இன்ப துன்பங்கள் அனைத்தும் உயிர் மையத்திலுள்ள இருப்பு நிலையாகிய அறிவு சீவ காந்த ஆற்றலால், படர்க்கை நிலையெய்தி மனமாக இயங்கி உணர்கின்றது.

மனத்தால் உணரும் அனைத்தும், அலைவடிவில் உயிர் மையத்திலிருக்கும் இருப்பு நிலையால் ஈர்க்கப்படுகின்றன. அவை உயிர்த் துகள்களில் பதிவாகின்றன. உயிர்த் துகள்கள் சுழற்சியால், உயிரில் பதிந்த பதிவுகளின் தன்மைகள் யாவும் அதன் விரிவு அலை மூலம் எப்போதும் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,

எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்”.

“கண்ணாடிப் பார்க்கக் காணலாம் உருவநிலை

உண்ணாடிப் பார்க்க உணரலாம் உயிர் நிலையை”

“மாசற்ற ஒளிஊடே, மறைந்திருக்கும் இருள்போல,

ஈசன் அறிவில் இருக்கும் நிலை”.

விளக்கமும் – பழக்கமும் :

பேசா நோன் பாற்றுங்கள் அறிவு தன்னைப்

பழக்கங்கள் எவ்வாறு வலுவாய் மோதி

பேசா நோன்பைக் கலைத்துப் பேசவைக்கப்

பெரும் போரை நடத்துகின்றதென உணர்வோம்;

பேசா நோன்பு இயற்கைக்கும் உயிர்க்கும் உள்ள


பிணைப்பை நன்குணர்ந்திட ஓர் நல்வாய்ப்பாகும்

பேசா நோன் பென்பது வாய் மூடல் அல்ல

பெரியமறை பொருள் மனதை அறியும் ஆய்வே.

மோனத்தின் பெருமை:

மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு

முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?

மோனமே அறிவினது அடித்தளம் ஆம்.

மிகவிரிவு, எல்லையில்லை, காலமில்லை;

மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்

முன்வினையும் பின்வினையும் நீக்கக்கற்கும்

மோனநிலை மறவாது கடமையாற்ற

மென்மை, இன்பம்,நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 29 : ஆக்கினை

PREV      :  பிப்ரவரி 27 : இறைவனின் நிழல்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!