பிப்ரவரி 22 : முழுமைப் பேறு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


முழுமைப் பேறு:

நமது அகத்தவப் பயிற்சி –
தியானம் [Meditation],
தற்சோதனை [Introspection],
உச்சமேம்பாடடைதல் [Sublimation],
முழுமைப் பேறு [Perfection] ஆகிய நான்கு அங்கங்களைக் கொண்டதாகும்.

தியானத்தில் ஆரம்ப கட்டத்தில் மனம் உயிரில் லயமாக்கப்பட்டு மயக்க நிலை நீங்கி விழிப்பு நிலை ஏற்படுத்துகிறது. தற்சோதனை மூலம் குற்றங் குறைகளை உணர்ந்து விளக்கத்திற்கும் பழக்கத்திற்கும் உள்ள போராட்டம் நீங்கப்பெற்று மனம் செம்மைப்படுத்தப்படுகிறது.

தனக்கும் சமுதாயத்திற்கும் உள்ள தொடர்பை உணர்ந்து, தான் ஆற்றவேண்டிய சமுதாயக் கடமையை நன்கு உணர்ந்து செயல்படும் திறன் ஏற்படுத்துகிறது.

பிறகு தன் கடமைகளை ஆற்றிக்கொண்டே தானே பரம் பொருளாக இருக்கும் உண்மையை துரியாதீத தவத்தின் மூலம் உணர்ந்து உச்ச மேம்பாட்டையடைய வழி செய்யப்படுகிறது. கடைசியாக எப்பொழுதும் பரம்பொருள் நிலையிலேயே இருந்து செயல்படும் முழுமைப் பேரும் கிடைக்கப் பெறுகிறது. யாருக்கும் தீமை நினைக்கவும் முடியாத அளவு ஆன்மீக விழிப்பு, எல்லா உயிரும் பரம்பொருளின் பிரதிபலிப்பே என்ற ஆன்ம விழிப்பு [Esoteric awareness] ஏற்பட்டு விடுகிறது.

ஈதல் இசை பட வாழ்தல் என்பதன் உட்கருத்தும் விளங்குகிறது. மனதின் மூலத்தைத் தெரிந்து கொள்ளும் போது அதுவேதான் உயிர் எனத் தெரியும்.
உயிர் நிலையை உணர வேண்டுமாயின் அதற்கு மனம் அடங்கி மிக நுண்ணிய அதிர்வலைக்கு நாம் வரவேண்டும்.

சாதாரணமாக நம் மனம் எப்போதும் பொருள் கவர்ச்சியிலேயே இருப்பதால் அவற்றிற்கேற்ப அதன் ஓட்டமும் அதிர்வலைகளும் மூலாதாரத்தையே நோக்கி செயல்படும். கீழ்நோக்கியே செயல்படும். ஆகவே நுண்ணிய இயக்கத்திற்கு வரவேண்டுமானால் மனம் அடங்க வேண்டும். இயக்க வேகம் குறைய வேண்டும். இதைத்தான் நம் குண்டலினி யோகத்தால் நாம் சாதிக்கிறோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“கடவுளை வணங்கும் போது, கருத்தினை உற்றுப் பார் நீ !

கடவுளாய்க் கருத்தே நிற்கும் காட்சியைக் காண்பாய் அங்கே”

“எண்ணம் தானாக எழுந்து அலையாமல்,

எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம்”.

உயரில் மனமடங்க:

“ஐந்து புலன்களையும் அடக்கி புருவத்திடையே

அறிவினது மூலத்தை ஆழ்ந்து நோக்கி அமர;

சிந்தை அடங்கிடும் சீவனே சிவனாகும்

சிறுகச் சிறுகப் பயின்றால் சித்திக்கும் உண்மை நெறி”.

குண்டலினி யோகம் :

“அறியாமை, உணர்ச்சிவய மயக்கம், மேலும்

அலட்சியம் மூன்றுமே அறிவின் ஏழ்மை;


அறிவுகுறுகிப் பிறழ்ந்து துன்பம் நல்கும்

அனைத்துச் செயலும் பிறக்கும் உண்மைகாணீர்:

அறிவை அயரா விழிப்பில் பழகிக் கொண்டு

அவ்வப்போ எழும்எண்ணம் ஆய்ந்து தேர்ந்து

அறிவின் ஒளியாய் வாழ ஆற்றல் நல்கும்

அருள்வழியே குண்டலினி யோகம் ஆகும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 23 : பூஜ்யமும் பூஜ்யரும்

PREV      :  பிப்ரவரி 21 : கடவுளைக் காணலாம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!