பிப்ரவரி 21 : கடவுளைக் காணலாம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
பிப்ரவரி, 21….
.
கடவுளைக் காணலாம் :
கடவுளை காணமுடியுமா என்றால் காணமுடியும். எந்தக் கண்ணால் பார்க்க வேண்டுமோ, எந்த நோக்கத்தோடு பார்க்க வேண்டுமோ, அப்படிப் பார்த்தால் காணலாம். ஒரு செயல் செய்கிறோம்; எந்தச் செயல் செய்தாலும் ஒரு விளைவு இருக்கிறதல்லவா? கையைத் தட்டினேன், சப்தம் வந்தது. கையைத் தட்டினவரைக்கும் தான் என்னுடைய முயற்சி. சப்தம் நான் செய்தேனா?, ஒலியை நான் செய்தேனா, நான் கொண்டு வந்தேனா? – இல்லவே இல்லை; இருப்பில் இருந்து, என்னுடைய செயலினால் குவிந்தது, காது கேட்கின்ற அளவுக்குக் குவிந்தது, அவ்வளவு தான் சொல்லலாம். ஆகவே இறைவன் இல்லாத இடமே இல்லை.
அதற்கு அடையாளம் என்ன? நீ எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு விளைவாக வருபவனும் இறைவன் தான். அது தான் இறைவனுடைய செயலே. அந்தச் செயல் அதனுடைய அனுபவத்தை வைத்துக் கொண்டு நல்ல செயலாக இருக்க வேண்டும் என்று சிந்தனையோடு திட்டமிட்டுச் செய்வோமானால் நலமே விளையும். இல்லை புலனளவில் கவர்ச்சியாகி மயக்கத்திலே ஏதோ வேகத்திலே செய்கின்றபோது இன்பமும் வரலாம், துன்பமும் வரலாம். இன்பம் வேண்டும், அமைதி வேண்டும் என்றால் அதற்கு இறையுணர்வு, அறநெறி இரண்டும் வேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“செயலிலே விளைவாக
தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப்
பயனென்ன தவறிழைத்துப்
பரமனைப் பின் வேண்டுவதால்?”.
வேதம் :-
“இயற்கையே ஈஸ்வரனாய்,
எல்லாமாய், தானுமாய்
இருக்கும் நிலை – இயங்குநிலை
இவற்றைத் தன் அகநோக்குப்
பயிற்சியினால் உள்ளுணர்ந்தோர்
பரந்த நிலைப் பேரறிவில்-
பாடும், பேசும், எழுதும்,
பலகருத்தும் வேதமாம்”.
“அருவமே உருவமாய் ஆதியே அறிவாய்,
அறிவே குணங்களாய், அனுபவமே ஒழுக்கமாய்,
இருளே வெளிச்சமாய், இன்பமே துன்பமாய்,
மௌனமே சப்தமாய், மாறியது அறிவீர்”.
“இயற்கை விதியறிந்து
ஏற்றி மதித்து ஆற்றும்
முயற்சிக்கு வெற்றி பெற, முழு
அமைதி என்றும் இன்பம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!