பிப்ரவரி 20 : தன்னிறைவுக்கான வழி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


தன்னிறைவுக்கான வழி:

மேல் நாட்டிலே கூட இந்தியாவை ஏழை நாடு, ஏழை நாடு என்று கூறுவதுண்டு. உண்மையிலேயே இந்த நாடு ஏழைநாடு அல்ல. இந்த நாட்டிலே என்ன குறைவு? இதைத்தான் நான் உங்களிடம் கேட்கின்றேன். இயற்கை வளத்திலே குறைவா, மக்களுடைய அறிவிலே குறைவா, அல்லது ஞானத்திலே தான் இந்நாடு குறைந்து விட்டதா? எவ்விதக் குறைபாடும் இல்லை.

இன்று இந்திய நாட்டிலே படித்துப் பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் சிறந்து விளங்குகின்றார்கள். பல நாடுகளை இவர்கள் வளப்படுத்துகின்றார்கள். இத்தகைய முறையிலே இன்று இந்திய நாடு எல்லா நாடுகளுக்கும் விஞ்ஞானிகளை ஏற்றமதி செய்து கொண்டு இருக்கின்றது என்றால் இது தவறல்ல. நான் நேரடியாகச் சென்று பார்த்ததைதான் கூறுகின்றேன்.

இந்த முறையிலே இந்நாட்டிலே விஞ்ஞான அறிவானது அந்த அளவிற்குத் ததும்பி இருப்பதைக் காண்கின்றோம். இவ்வாறு இருந்தும் என்ன குறைபாடு என்று கூறினால், அரசியல் முறையிலே இருக்கக்கூடிய ஊழல்கள் தான் இதற்குக் காரணம். ஒழுங்கான அரசியலை நம்மால் அமைத்துக் கொள்ள முடியவில்லை.

இதற்குக் காரணம் அந்நிய நாட்டு ஆட்சியிலே பட்ட பண்பாடானது அப்படியே தொக்கி நிற்கின்றது. இன்னும் நமக்கேற்ற முறையிலே நாம் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளவில்லை.வாழ்க்கையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால், வாழ்வாங்கு வாழ வேண்டுமானால், ஒவ்வொரு மனிதனுக்கும் ஐந்து துறைகளிலே அறிவு வேண்டும்.

அவை
[1] அறிவு,
[2] சுகாதாரம்
[3] பொருளாதாரம்,
[4] அரசியல்,
5] விஞ்ஞானம்
ஆகிய ஐந்தும் வாழ்க்கைத் தத்துவங்கள்.

வாழ்க்கைக்கு இந்த ஐந்தும் தேவை. ஒவ்வொரு மனிதனும் இந்த ஐந்திலேயும் நிறைவு பெற வேண்டும். சிறு குழந்தை முதற்கொண்டு 15, 20 ஆண்டுகள் வரையிலே இந்த ஐந்து துறைகளிலும் அறிவு பெற வேண்டும். அதன் பின்பு வாழ்க்கையிலே புகுந்தால் தன்னிறைவாக இருக்கும். யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டியதே இல்லை. எல்லாவற்றையும் அவரவரே உணர்ந்து திருந்தி அவர்கள் செயல்பாடுகளைச் செய்வதற்கு நல்ல வாய்ப்பிருக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

ஆட்சி நிலை :

“வாழத் தெரியாதோர் பெரும்பாலோர் வாழ்நாட்டில்

ஆளத் தெரியாதோர் ஆட்சியே நடைபெறும்;

கோழை கயவர் கொலைஞர் தடியர்கள்

ஏழை, நோயுற்றோர் எங்குமே சாட்சியாம்”.

“அறம், தத்துவஞானம் இவை எந்த அளவு சமுதாயத்தில்

ஓங்குகின்றனவோ – அந்த அளவே சமுதாயம் பண்பாட்டில்

உயரும்; மக்கட்குலம் சீரும் சிறப்பும் பெற்று இனிது வாழும்”.

ஞானமும் அரசியலும்:-

“அரசியல் கொந்தளிப்பால் மக்கள் வாழ்வு


ஆன்மீக நெறியை விட்டகன்று போச்சு,

அரசேற்ற சிலருக்குப் பயந்தொடுங்கி

அறிவுடையோரும் அடிமை வாழ்வை ஏற்றார்;

அரசு முறைத் தூய்மை பெற சிற்றூர் மக்கள்

அறிவு பொருள் நிலை கடமை உயர்த்த வேண்டும்,

அரசாட்சி மூலம் பின் ஆன்ம வாழ்வை

அடையலாம் அறிஞர்களே வாரீர் சேர்வீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 21 : கடவுளைக் காணலாம்

PREV      :   பிப்ரவரி 19 : ஆன்மநேய ஒருமைப்பாடு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!