வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்வில் நிறைவு பெற வழி :
நாம் பொறுப்புணர்ச்சியில் அழுத்தமாக நின்று கொண்டு மற்றவர்கள் இவ்வாறு தான் நடக்க வேண்டுமென்று நம்மை நாம் எல்லை கட்டிக் கொண்டால் நமது விருப்பத்துக்கும் முடிவுக்கும் ஒத்துவராத எவர் மீதும் வெறுப்பு உண்டாகும். நமக்கு வாழ்வில் என்றுமே நிறைவு ஏற்படாது.
நமது பொறுப்புணர்ச்சி, கடமை, இவற்றின் கூறாக உலகையும், மக்களையும் நம்மோடு வாழ்வில் தொடர்பு கொள்வோர்களையும் அவர்கள் தன்மை, செயல் இவைகளையும் அவை அமைந்துள்ளவாறு ஒப்புக் கொள்ள வேண்டும்.இந்த மனவிரிவில், இளகலில் நின்று கொண்டு மீண்டும் நம்மையும் உலகையும் நோக்குவோம்.
நாம் எங்கு, எவ்வாறு, என்ன நிலையில் இருக்கிறோம். இவற்றை கொண்டு பிறர்க்கு என்ன செய்ய முடியும் என்று அன்போடு அகம் நோக்கி நின்று முடிவு கண்டு நமது கடமையை இயன்றவாறு செய்வோம்.
உலகம் வேண்டுவதையெல்லாம், சமுதாயம் தேவைப்படுவதையெல்லாம் நாம் அளித்துவிட முடியாது. நம் வரையில் இயன்றதைச் செய்து நிறைவு பெறுவோம் என்ற முடிவில், நடப்பில் தான் நாம் நிறைவு காண முடியும்.
அன்பு தான் நமது வாழ்வின் ஊற்று. சிறிது வெறுப்புணர்ச்சி யானாலும் நமது உள்ளத்தை இனிமை கெடச் செய்யும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“மனிதன் அனுபவிக்கும் பொருட்கள்
சமுதாய கூட்டுறவில் பெற்றதன்றி
தனி ஒருவன் காரணமாக முடியாது”.
“சமுதாயமே தனி மனிதனை உருவாக்கும்
தொழிற்சாலை”.
“சமுதாயமே மனிதனை
உயர்விக்கும் கலாசாலை”.
இனிமை காக்க :-
“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
வழிகண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர்நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதிபடும் துன்பங்கள் தோல்வியுறும்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
– தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : பிப்ரவரி 18 : உலகையே வசமாக்கலாம்
PREV : பிப்ரவரி 16 : உயர் புகழ்