பிப்ரவரி 13 : அன்புரைகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
பிப்ரவரி, 13….
அன்புரைகள்:
நீங்கள் உயிரறிவைப் பெற்று உண்மை விளக்க ஒளியில் விழிப்போடு வாழ வாழ்விலே ஒரு நல்லதோர் திருப்பத்தை ஏற்றிருக்கிறீர்கள். நீங்கள் மேன்மையுற வேண்டும். உங்களால், உங்கள் வாழ்வின் ஒழுக்கம் பின்பற்றி, மனிதகுலம் மேன்மையுற வேண்டும். உலகம் அமைதி பெற வேண்டும்.
[1] நுண்மான் நுழைபுலன்
[2] ஏற்பும் இணக்கமும்
[3] தன்மை நலப்பேறு
[4] தகைமை
[5]ஆக்கம் எனும்
ஐவகை குணநல உயர்வில் நீங்கள் அபார விழிப்புடன் வாழ வேண்டும்.
[1] ஆக்கினை
[2] மூலாதாரம்
[3] சகஸ்ராதாரம்
[4] சக்தி களம்
[5] சிவகளம் எனும்
ஐவகைத் தவத்தாலும் அறிவை நுண்மை மிக்கதாயும் ஆற்றல் மிக்கதாயும் வளப்படுத்திக் கொள்ளுங்கள்.
[1] எண்ணங்களை ஆராய்தல்
[2] ஆசை சீரமைப்பு
[3] சினம் தவிர்த்தல்
[4] கவலையொழித்தல்
[5] மெய்ப்பொருள் உணர்தல் என்னும்
ஐவகையான தற்சோதனைப் பயிற்சியினால் மனிதப் பிறவியின் மாண்பைச் சிறப்பித்துக் கொள்ளுங்கள். உங்களைப் பார்த்து இத்தகைய சீரிய வாழ்க்கை நெறியினை மற்றவர்களும் பின்பற்றும்படியாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டு உயர்வு பெறுங்கள். இது நமக்கு மட்டுமல்ல, மனிதகுல முழுமைக்கும் வாழ்க்கை நலத் தொண்டாக அமையும்.
உலகில் மனித குல வாழ்வில் எத்தனையோ மாற்றங்கள் இதுவரையில் ஏற்பட்டன. மனவளமும், உடல் நலமும், அமைதி வாழ்வும் அளிக்கக்கூடிய நமது குண்டலினியோக வாழ்வே மனித குலத்துக்கு எல்லா வகையிலும் நலம் பயக்க வல்லது. நீங்கள் ஒவ்வொருவரும் அமைதிப்படையின் உறுப்பினராகத் திகழவேண்டும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
“அறிவின் இருப்பிடம் இயல்பு இயக்கம்
அறிந்து ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்”.
“மனம், மொழி, சொல், மூன்றின் ஆற்றலுக்கும் விளைவுண்டு;
இதை, மறைக்கவோ – மறுக்கவோ – மறப்பதோ முடியாது”.
“அன்பிரக்கம் தொண்டு தவம் ஈகை இன்சொல்
ஆன்மிக நெறியாகும் போற்றிக்காக்க
துன்பங்கள் குறைந்துவரும் மேலும் தெய்வத்
துணைகிட்டும் வாழ்வில் புகழ் நிறைவு ஓங்கும்;
நன்முறையில் தனிமனிதன் வாழக்கற்றால்
நாட்டினிலும் வீட்டினிலும் அமைதி ஓங்கும்,
இன்பமயமே எங்கும், இந்த உண்மை
எளிதன்றோ கற்பதற்கும் வாழ்வதற்கும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!