பிப்ரவரி 10 : பிறவித் தொடர்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


பிறவித் தொடர்பு:

எரியும் விளக்கிலிருந்து தோன்றும் வெப்பமும் வெளிச்சமும், விளக்கை நிறுத்திய உடனே எங்கே போகின்றன? சுற்றிலும் தொடர்பாக உள்ள அணுக்களில் அவ்வெளிச்சம் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறது. அணுவில் காந்தமாகிறது. அந்த அணுக்கள் தாங்கும் அளவு போக மீதம் சூனியம் என்ற ஈர்ப்புச் சக்தியில் சேர்ந்துவிடுகிறது. சூன்யமாகி விடுகிறது, வெளிச்சம் தோன்றிக் கொண்டே பிரதிபலித்துக்கொண்டே, சூனியமாகிக் கொண்டே இருக்கிறது.

ஆற்றில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது; போய்க் கொண்டேயும் இருக்கிறது. அனால் பார்வைக்கு ஆறு நிலையான வடிவமாகத் தெரிந்து கொண்டிருக்கிறது. வரவு நின்றுவிட்டால் பார்க்கும் நீரானது ஓடி மறைந்துவிடும், ஆறு காலியாகத் தெரியும். இது போன்றே தான் விளக்கின் ஒளியும் நிலையானது அல்ல. விளக்கை நிறுத்திய உடனே ஒளி மறைந்துவிடுகிறது.

இது போன்றே, உடலில் சுவாச ஓட்டம், இரத்த ஓட்டம் நின்றவுடன், அதனால் உற்பத்தியாகி இயங்கிக்கொண்டேயிருந்த காந்த அலைகளின் உணர்ச்சிச் செயல்பகுதி செயலற்றதாகி விடுகிறது. அலை அடங்கின நீராகும் தன்மை போலவும், நீராவி குளிர்ந்து விட்டால் தண்ணீராகிவிடும் தன்மை போலவும் அறிவு [Consciousness] என்ற உணரும் சக்தியும் ஆதி என்ற மௌன சக்தியாகிவிடுகிறது.

எழுச்சி, இயக்கம் என்னும் நிலையில் எல்லையுடையதாக இருந்த சக்தி இயக்கம் நிற்க எல்லையற்று நிரவி நிர்விகற்ப நிலையாகிவிடுகிறது. உயிரைப் பற்றி கற்பனைகளாக எழுதப்பட்டவற்றை, சொல்லப்பட்டவற்றை மறந்து, அறிவை நிறுத்தி ஆராய்ந்து பார்த்தால் இது நன்றாக விளங்கும்.
நாத விந்துவின் சேர்க்கையே எல்லாப் பிறவிகளுக்கும் முன் தொடர்பும் பின் தொடர்பும் ஆகும். அதாவது தாய் தகப்பன் முன்பிறவி, மக்கள் பின் பிறவியாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“சிறுகச் சிறுகப் பயின்றால்

சித்திக்கும் உண்மை நெறி”.

“வித்துவின் மூலம் தான் பிறவித் தொடர் இந்தத்

தத்துவத்தை உணர்ந்தவரே தனையறிய வல்லவர்கள்”.

பிறவித் தொடர்:-

“மனிதருக்குப் பிறப்புத் தொடர் தன்னைத் தேரா

மாயையால் வினைப்பதிவால் கடல்போல் நீளும்

கனிவுடைய கர்மத்தால் வித்தின்மூலம்

கருவுருவாய்க் குழந்தைகளாய்த் தொடர்வதொன்று

இனி உடலைவிட்ட பின்னர் உயிர் உள்ளுள்ளே

எஞ்சியுள்ள வினைப்பதிவுக் கொப்பவாழும்

தனிமனிதனுடனிணைந்து அனுபவித்துத்

தான் தூய்மை பெறுகின்ற தொடர் மற்றாகும்.”

பிள்ளைகளும் பெற்றோரும்:-

“பிள்ளைகளைப் பெற்றோர்கள் உடலைவிட்டால்


பெரும்பாலும் அவருயிர்கள் கருத்தொடர் ஆம்

பிள்ளைகளோடிணைந்துவிடும் இயற்கைநீதி

பெற்றோர்கள் தவம் ஆற்றி அறமும் செய்தால்

பிள்ளைகளை வழிவழியாய் இப்பேராக்கம்

பின் தொடர்ந்து குலக்கொடியைத் தூய்மையாக்கும்

பிள்ளைகளும் பெற்றோரும் வினைத்தொடர் ஆம்

பேரிணைப்பில் எப்போதும் ஒன்றேயாவார்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 11 : ஆண்டவன் கணக்கு

PREV      :  பிப்ரவரி 09 : இருதய மலர்களுக்கு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!