பிப்ரவரி 05 : முயற்சி – பயிற்சி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


முயற்சி – பயிற்சி :

தன் தகமை, திறமை, தவறு, தேவை இவற்றைச் சரியானபடி கணித்துக் கொண்டு சிந்தனையோடு திட்டமிட்டு விடாமுயற்சியோடு வினையாற்றினால் வெற்றி நிச்சயம். அமைதியும், நிறைவும், மகிழ்ச்சியும் உண்டாம். இக்குண்டலினி யோக முறை இந்தத் துறையில் மனிதனை உயர்த்தி சிறப்படையச் செய்கிறது.

உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன முயற்சி எடுத்தீர்கள்? எங்கே எவ்வாறு ஏமாற்ற மடைந்தீர்கள்? உங்களுக்குள்ளாகவே சிந்தனையைத் தூண்டி ஆராயுங்கள். உங்கள் மனம் ஒரு பெரிய இயற்கைச் சுரங்கம். அதில் எல்லாச் செல்வங்களும் உள்ளன. முறையாக முயன்றுப் பெற வேண்டும், அவ்வளவே.

இன்ப துன்பச் சுழலில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதே வாழ்க்கை. வாழ்வில் துன்பங்களும் சிக்கல்களும் பெருகும்போது அதிலிருந்து தன்னை மீட்டுக் கொள்ள மனிதன் விரும்புகிறான், முயலுகிறான் என்றாலும், முன்செய்த தவறுகளின் விளைவுகள், செயல்களின் பழக்கப்பதிவுகள் இரண்டும் அறிவில் கொண்ட முடிவுகள் இவையெல்லாம் அவன் விடுதலைக்குத் தடைகளாக இருக்கின்றது. விடா முயற்சியும் விழிப்பு நிலையும் பழக்கத்தை மாற்றி விளக்கம் பெற்று வாழும் துணிவும் பயிற்சியினாலன்றி கிட்டாது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

“காலம் தாழ்த்தாமல் கடையைச் செய்

இல்லையேல் காலம் உன்னைத் தாழ்த்தி விடும்”.

அருள் தொண்டு:

“நிறை நிலையை மறந்து ஐந்து புலன்கள் மூலம்

நினைவலையாய் இயங்கி மனம் எல்லை கட்டி

சிறைப்பட்ட நிலைமையதே மாயையாச்சு;

சிந்தனையில் உயர்ந்து பெற்ற அகத்தவத்தால்

இறைவனோடு நிறை நிலையில் நிற்கக் கற்றோம்

எல்லையற்ற வீடுற்றோம், அறிஞர் போற்றும்

மறைபொருளே அகத்ததுவாய் விளங்கும் உண்மை

மற்றவர்க்கும் உணர்த்தி உளம் மகிழ்வோம் வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :  பிப்ரவரி 06 : என் வீடு

PREV      :  பிப்ரவரி 04 : மெய்விளக்கக் கல்வி

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!