பிப்ரவரி 02 : நமது கடமை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


நமது கடமை:

பழக்கத்தின் காரணமாக எத்தனையோ குறைபாடுகள் உள்ளன. அதை எல்லாம் படிப்படியாகப் போக்கிக் கொள்ளலாம். எந்தச் சீர்திருத்தமும் இடித்துக் கூறியோ, குற்றம் கூறியோ வரமுடியாது. ஆகவே நலம் கூறி, நலம் செய்து அதன் மூலமாகத்தான் தீமை ஒழிவதற்கு, வேண்டாமை ஒழிவதற்கு நாம் பார்க்க வேண்டும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் நல்லதைப் புகுத்த வேண்டியது என்ற முறையில் ஒவ்வொரு குடும்பத்திலேயும் “மனவளக்கலையைக்” கற்றுக் கொடுக்க வேண்டும். இதனால் மனம் ஒடுங்குகின்றது. அடங்குகின்றது. அறிவு நுட்பம் பெறுகின்றது. அந்தச் சிந்திக்கும் ஆற்றல், அறிவு, நுட்பம் இவை கிடைத்துவிட்டால், அவற்றின் கீழே பொக்கிஷம் போல அனைத்து நலன்களும் கிடைக்கும்; எல்லா மனிதர்களுக்கும் தேவையான அத்தனையும் கிட்டும்.

தவம் செய்து கடவுளிடம் வரம் கேட்கப் போகிறேன் என்ற ஒருவரிடம் “நீ என்ன கேட்டாலும் அது பற்றாக்குரையாகத் தான் இருக்கும்” என்று கூறிவிட்டு, மற்றவர் நான் தவம் செய்யும் போது கடவுளே என்னிடம் வந்து “உனக்கு என்ன வரம் வேண்டும்? ராஜ்ஜியம் வேண்டுமா” என்று கேட்டாலும் வேண்டாம், வேண்டாம் என்று சொல்லிக்கொண்டே வருவேன். எனக்கு நல்ல “அறிவு” வேண்டும் என்று தான் கேட்பேன் என்றார். “அது தான் சரி” என்று ஒத்துக்கொண்டார். அது போல நல்ல அறிவு இருக்குமேயானால் அதன் கீழ் எல்லாம் பெறலாம்.

ஆகவே அறிவை மேம்படுத்த வல்ல, அறிவைத் திடப்படுத்தவல்ல, அறிவைக் கூர்மைபடுத்த வல்ல இந்த “மனவளக்கலையைப்” பயின்று இது வரையிலே இந்த அறிவைப் பற்றி அறியாமல், வாழ்வைப் பற்றி தெரிந்து கொள்ளாமல், செய்த தவறுகளினால் ஏற்பட்ட விளைவுகளை எல்லாம் போக்கிக் கொண்டு மேன்மேலும், அத்தவறுகள் எழாமல் காத்துச் சிறப்பாக வாழ வேண்டுமானால் இந்த “மனவளக் கலையை” ஒவ்வொரு குடும்பத்திலும் ஆணும், பெண்ணும் சமமாகக் கற்றுக் கொண்டு செயல்பட வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

” இறைவனை வணங்குவதை விட

சிந்திப்பது மேல்”.

“இறைவனே நான் ஆக இருக்கிறான் என்ற

உண்மையைத் தெளிவாக உணர்ந்த

நிலையிலே தன்முனைப்பு எழவே எழாது”.

அறிவின் அமைதி :

“இறைவனது திருநிலையோடு இணைந்தபோது

இன்பதுன்ப உணர்வுகளைக் கடந்துயர்ந்து

மறைபொருளாம் அறிவு அதன் முழுமை பெற்று

மா அமைதிபெறும்; அது பேரின்பமாகும்;

நிறையறிவுநிலை ஈதே இந்தப் பேற்றை

நினைந்தோ மறந்தோ உலகில் மனிதன் அந்தத்

துறைநோக்கி வாழ்க்கைக் கடல் நீந்துகின்றான்-

துணைகுருவே வழி அறமும் தவமும் ஆகும்”.

மனித மாண்பு :


“மனிதவுயிர் பிறவியதன் மதிப்புணர வேண்டும்

மனம் உயிர்மெய்மூன்றான மறைபொருட்களான

மனிதனுடைய ஆற்றல்களை மலரவைக்க வேண்டும்

மறைந்திருக்கும் உட்பதிவாம் பலவினைகடம்மை

மனிதனேமாற்றி அறச்செயல் பதிவு செய்து

மனத்தூய்மை வினைத்தூய்மை பெற்று பரத்துறைந்து

மனிதனவன் உயர்மனிதனாக வாழச்செய்யும்

மனவளக்கலையிதனைப் பரப்பி நலம் காண்போம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  பிப்ரவரி 03 : ஆன்மீக இனிமை

PREV      : பிப்ரவரி 01 : ஆன்மீகப் பயிற்சியின் பயன்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!