நவம்பர் 14 : கர்ப்பகாலப் பொறுப்புகள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


கர்ப்பகாலப் பொறுப்புகள் :

“குடும்ப வாழ்வில் பொறுப்பேற்றுள்ள கணவன் – மனைவி இருவரும் கருப்பையில் வளர்ந்து வரும் குழந்தையின் உறுப்புகளில் வளர்ச்சியை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில், தம்பதிகள் போதைப்பொருள் உபயோகித்து உடலுறவு கொண்டாலும், முரட்டுத்தனமாக நடந்து கொண்டாலும் உருவாகிவரும் குழந்தையின் உறுப்புகள் அதன் விளைவாகத் தாக்கப்பெறும்.

செயல் விளைவு நீதி அடிப்படையில் பெற்றோர்களின் அறியாமை, அலட்சியம் உணர்ச்சிவயம் இவற்றால் கருவில் வளரும் குழந்தையின் உறுப்புகள் நலிவுறும். மேலும் கர்ப்ப காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு மனதில் துன்பமோ, அச்சமோ அளிக்கும்படி எவரும் நடந்து கொள்ளக்கூடாது. குழந்தை உருவாகும் போதே தாய்-தந்தை இருவரின் கருமையப் பதிவுகள் குழந்தைக்குச் சொந்தமாகிவிடும். அதோடு, கருப்பையில் குழந்தை வளரும் காலத்திலும், பிறந்தபின் அதனை வளர்க்கும் முறையிலும் ஏற்படும் விளைவுகளும் குழந்தையின் உடல் நலத்தையும், மன வளத்தையும் தக்கபடி அமைத்துக் கொடுக்கும்.

நல்ல குழந்தை பிறக்க வேண்டும் என்று கணவனும், மனைவியும் விரும்புவது இயல்பு. அதற்கேற்றவாறு அவர்கள் கடமையை ஆற்றாவிட்டால் எவ்வாறு நல்ல குழந்தையை அடைவது? ஒரு குழந்தையின் உடல் நலமும், மனவளமும் பெற்றோர்களுக்கு மட்டும் உரிமையானவையல்ல. பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மனித சமுதாயத்தில் ஓர் உறுப்பினரே.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

*************************************

 

 

குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :

“வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ

வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;

பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து

பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்

ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை

உயர்வு எனும் சொற்களுக்கு அர்த்தம் காணும்

இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண

ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்”.

பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :

“பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து

பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;

பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்


பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  நவம்பர் 15 : மௌன காலம்

PREV      :    நவம்பர் 13 : ஆன்மாவின் மூன்று நிலைகள்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!