நவம்பர் 04 : ஐந்திணைப்புப் பண்பாடு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!
வாழ்க்கை மலர்கள்….
நவம்பர், 04….
ஐந்திணைப்புப் பண்பாடு :
“தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப்பற்றி சிந்தித்தல், தன் குறையுணர்தல், தான் திருத்தம் பெறத்திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல், என்பன எல்லாம் தற்சோதனைப் பயிற்சியில் அடங்கும்.
தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கி ஒவ்வொன்றாகப் பயிற்சியளிக்கப்படுகின்றது. முதற் பயிற்சி ‘நான் யார்’? என்ற வினாவையெழுப்பி விடைபெறுதலாகும். உடல், உயிர், அறிவு மெய்ப் பொருள், என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது. இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.
இரண்டாவது பயிற்சி எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குபடுத்துவதாகும். தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும் பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும் முறையிலும் எண்ணம் சொல் செயல் மூன்றையும் பண்படுத்தி பயன் பெறுதலாகும்.
மூன்றாவது பயிற்சி அறுகுணச் சீரமைப்பு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும் நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர்நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு நற்குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுண சீரமைப்பாகும். மனிதன் உணர்ச்சி வயப்படும் போது தான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலை பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு ஆறுகுண சீரமைப்பு இன்றியமையாததாகும்.
நான்காவது பயிற்சி கவலை ஒழித்தல், அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித் தனம் இவற்றால் செயல் தவறுகளும் கணிப்புத் தவறுகளும் ஏற்படுகின்றன. இவைகளையெல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லா கவலைகளையும் ஒழித்து நலம் பெற கவலையொழித்தல் என்ற பயிற்சி நன்கு உதவுகின்றது. குண்டலினி யோகத்தால் விழிப்பு நலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால் அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்துவிடும். எனவே இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை “ஐந்திணைப்பு பண்பாடு” என்று வழங்குகிறோம்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
**************************************
ஆறுகுண சீரமைப்பின் நல்விளைவு :
“பேராசை கவலை சினம் அழுக்காறு விட்டால்
பேரறிவாய் விரிவடையும் மனது தரம்மாறி
ஓராசை உளத்திலெழ ஒத்த நுட்பத்தோடு
உடலறிவு சமுதாயம் இயற்கை நான்கின் இனிமை
சீராக காத்து ஆற்றும் சிறப்பு இயல்பாகும்,
சிந்தனையின் உயர்வினிலே விழிப்புடனே வாழ
யாராசையும் இதனால் அறிவறிய ஓங்கும்
எப்போதும் அமைதி இன்பம் நிறைவு பெற்று வாழ்வோம்”.
அகத்தவ மன்றம் :
“தன்முனைப்பு ஒருவரிடம் இருக்குமானால்
சாட்சியுண்டு பேராசை சினம் பொறாமை
என்கருத்தும் செயல்களுமே நீதியென்று
எண்ணல் பிறர் வருத்தத்தில் இன்பம்காணல்
புன்செயலின் புலன் மயக்கில் ஆழ்ந்து ஆழ்ந்து
புகழ்தேட பொருள் பெருக்கச் செயல்கள் செய்வார்
வன்மனத்தோடெப் போதும் வெறுப்புணர்த்தும்
வகையில் முகம் கடுத்திருத்தல் இவையே சான்றாம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..
தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!