நவம்பர் 01 : திருவிளையாடல்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


திருவிளையாடல் :

இயக்க மண்டலத்திலுள்ள எல்லாவற்றையும் சூழ்ந்தழுத்திக் கொண்டிருக்கும் தூய இறைவெளிதான் இருப்பு மண்டலம். தூய வெளியெனும் பிரம்ம நிலை தன்னிறுக்கச் சூழ்ந்தழுத்தும் பேராற்றலால், எந்த ஒன்றையும், மற்ற ஒன்றிலிருந்து பிரிந்து போகாமல், சூழந்தழுத்திக் கொண்டிருக்கின்றது. ஆயினும் ஒவ்வொரு வேதான் நுண்ணணுவும் தனது தற்சுழற்சி விரைவாலும், யோகான் எனும் நுண்ணணுவின் அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் எனும் காந்த தன்மாற்ற அலைகளாலும், நுண் விண்களிடையே குறிப்பிட்ட அளவில் தொலைவு அமைந்திருக்கின்றது. அவை காக்கவும் படுகின்றன.

எனவே நுண்ணணுவானாலும் சரி, அண்டங்கள் ஆயினும் சரி, அவற்றில் எழுந்து இயங்கும் அலையின் அழுத்தத்திற்கு மேலாக எதுவும் விலகிப் போகாமல் காப்பது சூழ்ந்தழுத்தும் அனைத்தியக்க அருட்பேராற்றலே.
அதேபோன்று எந்த நுண்ணணுவோ அண்டங்களோ – அவற்றிலிருந்து வெளியாகும் அலைகளின் தள்ளும் ஆற்றலுக்கு மேல் விலகவும் முடியாது. இந்த நியதி தான் வான்காந்த ஆற்றலின் விளைவுகள்.

மேலும் நுண்ணணுக்களாகிய வேதான்கள் இடையிலும், கோள்களின் இடையிலும், கோள்களின் உட்புறம் உள்ள இறை வெளியிலும் கணக்கிட முடியாத அளவில் யோகான் நுண்ணணுக்கள் தோன்றிக் கொண்டேயும், அவை தன்மாற்றங்களை அடைந்து கொண்டேயும் இருக்கும் விந்தைகளே வான்காந்தம் எனும் மறை பொருள் பேரியக்க மண்டலத்தில் ஆற்றும் திருவிளையாடல்கள். இயற்கையின் இயல்பாக நடைபெறும் தெய்வீக நிகழ்ச்சிகளைத் திருவிளையாடல் என்று வழங்குகிறோம்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

 

சூனியமே உறுதிப் பொருள் :-

“சூனியமாம் இருள் ஏதுமற்ற தென்றும்

சொல்வார்கள் புலனுணர்வின் அளவில் நின்று;

சூனியமே கோடானு கோடியண்ட

சூரியன், சந்திரன் இவற்றைத் தாங்கி நிற்கும்;

சூனியமே வலிமைமிக்க உறுதியாய் நின்று

சொரூப கோடிகளை ஈர்த்தியக்கு தன்றோ?

சூனியத்தை அணு நிலையைக் கொண்டா ராய்ந்தே

சூட்சுமமாய் யூகித்து விளங்கிக் கொண்டேன்”.

ஈர்ப்புச் சக்தியும் – இயங்கும் பிரபஞ்சமும் :-

“ஈர்ப்பு எனும் ஓர் சக்தி சூனியமாக

எங்கும் நிறைவாயிருக்கும் நிலையில் ஆதி.

ஈர்ப்பு என்ற அரூபத்தின் எழுச்சியேதான்

எவ்வுருவுக்கும் மூல அணு என்கின்றோம்.

ஈர்ப்பு ஒலி,ஒளியாக அணுவில் மாற


இந் நிலையைக் காந்தம், உயிர்,சக்தி என்போம்.

ஈர்ப்பு அணுவாகிப்பின் இணைந்திணைந்து

இயங்குவதே அண்டபிண்ட சராசரங்கள்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :    நவம்பர் 02 : சமபங்கு

PREV      :   அக்டோபர் 31 : சத்சங்கம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!