டிசம்பர் 08 : உலகக் குடும்பம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


உலகக் குடும்பம் :

நாம் எல்லோரும் உலகம் என்ற மண்மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கிருப்பது ஒரே சூரியன் தான். நமக்கு ஏற்படும் நீர் தேவைகளை முடிப்பதற்கு இருப்பது ஒரே கடல் தான். நாம் எல்லோரும் மூச்சு விடுவதற்கு உள்ள காற்றும் ஒன்றுதான். இவற்றில் ஒன்றைக்கூட நம்மில் எவருமே உற்பத்தி செய்தது இல்லை. நமது முன்னோர்களும் செய்ததில்லை.

எல்லாம் வல்லதாகிய இறைநிலை என்னும் இயற்கையானது தனது பூரணம், பேராற்றல், பேரறிவு என்ற மூலதனத்தைக் கொண்டும் அதன் பரிணாமம், இயல்பூக்கம், கூர்தலறம் என்ற இயக்க நியதிகளைக் கொண்டும் வான்மண்டலத்தையும் உலகையும் உருவாக்கி, இந்த அழகிய வளம் நிறைந்த உலகின் மீது நம்மையும் உருவாக்கி வாழ வைத்திருக்கிறது. நமக்கு அன்னையாகவும், தந்தையாகவும் உள்ள அருட்பேராற்றலான இயற்கை நாம் அனைவரும் நலமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ எல்லா வளங்களையும் நிறைவாக அமைத்துக் கொடுத்திருக்கிறது.
நமது சிந்தனையை உயர்த்தி இவற்றையெல்லாம் நாம் உணரும்போது நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உடன் பிறந்தவர்கள் என்பது சந்தேகமில்லாமல் தெரிகின்றது அல்லவா?

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

சேர வாரீர் :-

“பல நாட்கள் தவம் செய்து, கனல் மிகுந்த

பக்குவமும் தனையறிந்த நிலையும் கொண்டு

நலமொன்றே பலனான ஞானமார்க்கம்

நாடிநிற்கும் எவர்க்கும் அவர் அறிவிற்கேற்ப

சில நாளில் சீவனையே சிவனாய்க் காணும்

சிந்தனையின் சிகரத்தில் கொண்டு சேர்த்து

உலக சமாதானப் பெரும் திட்டம் காட்டி

உயர்ஞானம் உணர்த்துகின்றேன் கொள்வீர், வாரீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : டிசம்பர் 09 : மதிப்புமிக்க மனித இனம்


PREV      :  டிசம்பர் 07 : அமைதி அடைவோம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!