ஜூலை 29 : உலக சகோதரத்துவம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


உலக சகோதரத்துவம் :

“மூன்று மறைபொருள்களாகிய தெய்வம், உயிர், சீவகாந்தம் ஆகிய இவற்றைப் பற்றிச் சரியாக விளங்கிக் கொள்ளாததனாலேயே மனித இனம் பெரும்பாலும் முடிவில்லாத துன்பத்தில் ஆழ்ந்து கிடக்கிறது. கல்வி முறையின் மூலமாக இந்த மூன்று மறைபொருள்களைப் பற்றிய விளக்கமானது தெளிவாக எல்லோருக்கும் கொடுக்கப்பட்டால் தான், மனித இன முன்னேற்றம் என்பது நடைமுறையில் சாத்தியமாகும். ஒவ்வொரு தனி நபரும், பொருளாதாரம், அரசியல், சுகாதாரம், அறிவியல் ஆகிய பல்வேறு கோணங்களிலே இந்தப் பரந்த உலகத்தோடு ஒரு இடைவிடாத தொடர்பை எப்போதும் வைத்துக் கொண்டிருக்கிறார். யாராவது ஒரு தனி நபர் இத்தகைய அறிவு விளக்கத்திலோ அல்லது வாழ்க்கை ஒழுக்கத்திலோ பின்தங்கி இருப்பாரானால் அது தொடர் நிகழ்ச்சி போல குடும்பம், சமுதாயம், உலகம் என்ற அளவில் மனித குலத்துக்குப் பெரிய அளவில் மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

ஆகவே, உலகில் வாழும் ஒவ்வொருவரின் நலத்திற்காகவும், மனித சமுதாயம் முழுவதும் அறிவு வளமும், மன வளமும், உடல் நலமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். உலக சகோதரத்துவம் (Universal Brotherhood) என்பது ஒரு பேச்சளவில் இருக்கிற கொள்கையாக இருக்கக் கூடாது. அது மெய்ஞானிகளாலும், விஞ்ஞானிகளாலும், சிந்தனையாளர்களாலும் வரையறுத்துச் சொல்லப்பட்ட உண்மை உணர்வாக இருக்க வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதருடைய அனுபவ அறிவாக அறிவாட்சித்தரமாக அமைய வேண்டும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

இறைநிலையை விளக்கும் கடமை :

“தெய்வம் உயிர் சீவகாந்தம் திருநடனம் மறைபொருள்

தெரியாமலே உலகம் திகைத்துச் சிக்கல் ஏற்றது;

ஐயமின்றி அனைவரும் இவ்வரும் பொருள் விளங்கியே

அனைத்து விஞ்ஞானம் மெய்யறிவு நோக்கி முழுமையாய்

உய்ய ஓர் சிறந்த வழி உயர்ந்த காந்தத் தத்துவம்,

உண்மை தெய்வம், உயிர், அறிவு, உணர்த்தி விட்டதிந்த நாள்

செய்யவுள்ள கடமையோ இச்சீரறிவு உலகெலாம்

சிறப்புடனே பரவ ஏற்ற சீரிய தொண்டாற்றுவோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.


NEXT      :  ஜூலை 30 : மனநிறைவு மனிதனுக்கு மகிழ்ச்சிச் சுரங்கம்

PREV      :  ஜூலை 28 : தன்னையறிய தனக்கொரு கேடில்லை

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!