ஜூலை 28 : தன்னையறிய தனக்கொரு கேடில்லை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


தன்னையறிய தனக்கொரு கேடில்லை :
.

“எண்ணத்தின் அளவையொட்டியே மனத்தின் தரமும் உயர்வும் அமைகின்றன. மனத்தின் அளவில் தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எண்ணத்தைக் கொண்டுதான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்டவும் வேண்டும்.
.

எண்ணத்தை ஆராய வேண்டுமென்றால் எண்ணத்தால் தான் ஆராய வேண்டும். எண்ணத்துக்குக் காவலாக எண்ணத்தைத் தான் நியமித்ததாக வேண்டும். ஏனென்றால் வேறு ஆள் இல்லை. மேலும், வேறு யாராலும் இக்காரியங்களை முடிக்க முடியாது. காரணம் ஒருவரது எண்ணத்தை அறிந்து கொள்ள அவருடைய எண்ணத்தைத் தவிர வேறு யாராலும் முடியாதே !
.


எண்ணம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். எண்ணம் எப்பொழுதும் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். எண்ணம் தன்னையே கண்காணித்துக் கொண்டு, தன்னையே நெறிப்படுத்திக் கொண்டு, தன்னையே திருத்திக் கொண்டு இருக்க வேண்டும். இதுதான் தற்சோதனை என்ற அகத்தாய்வு (Introspection). அந்த அகத்தாய்வை வாரம் ஒரு முறை, மாதம் ஒருமுறை என்று அவ்வப்போதும் செய்ய வேண்டும். கணத்துக்குக் கணமும் செய்ய வேண்டும். அப்போது தான் குணநலப் பேறு வரும். முழுமைப்பேறு வரும்”.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * *
.
“எச்செயலும் மூலமெனும் எண்ணத்தாலாம்
இன்பதுன்பக் காரணமும் அதுவேயாகும்;
இச்சையெனும் தீஎழுந்து எரியும்போது
இயங்கும் உடற்கருவிகளால் அறிவைக்கொண்டு
அச்சமற அனுபவித்தே அணைக்களாகும்,
அதைத்தணிக்க வேறுவழியில்லை. அதனால்
நச்சுவிளை இச்சைகளை விளைவிக்காத
நல்லொழுக்க வாழ்க்கைக்கு முறைவகுத்தேன்”.
.

“பாத்திரம் அளவைக் கண்டு பண்டத்தை அதனிலே வை
கோத்திரம் பார்த்தல் விட்டுக் குணத்தினை அறிதல் நன்றாம்;
ஆத்திரம் வரும்போதெல்லாம் ஆராய்ச்சி அதன் மேல் கொள்ளு;
தோத்திரம் செய்யும்போது துதிப்பவன் நிலையைக் காணு”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Like it? Please Spread the word!