ஜூலை 23 : தவம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


தவம் :

“இப்போது, இங்கே நாம் அமர்ந்திருக்கிறோம். நம் மனம் எங்கேயோ ஓடுகின்றதென்றால், நாம் எண்ணியது தான் அது. எதை ஏற்கனவே எண்ணி எண்ணி நம் எண்ணத்தை அதிகமாகச் செலவு செய்தோமோ, அதற்கே நமது மன அலைகளை ஆக்கி வைத்திருக்கிறோம். அதனால், நாம் ஒடுங்கி நிற்கிற போது அதற்கு ஒத்துவராமல் அலை நீளம் முன்னர் இயங்கி இயங்கி எங்கே கொண்டு வந்து வைத்தோமோ அங்கே உற்பத்தியாகிற போது, அதுவே இயக்கமாகிறது; அத்தனை செல்களும் உடலிலேயும், மூளையிலேயும் இயங்கி அதுவே இயக்கமாகிறது. அதனால், இதற்கு – இந்தத் தவத்திற்கு – நன்றாகப் பழக வேண்டும். பழகப் பழக மனம் தன்னுள்ளேயே ஒரு தன்மையை (Character) ஏற்படுத்திக் கொள்ளும்.

எந்தத் தொழிலை செய்யும் போதானாலும் சரி, துரியத்தில் மனத்தை வைத்துப் பழகி வரலாம்.

“கருதவத்தில் ஆரம்ப சாதகர்கள்
கரும ஞானக்கருவிகளை இயக்கும் போதும்
புருவமத்தி நினைவோடு இருத்தல் வேண்டும்
புலன்கள் தமை இம்முறையில் பழக்கி விட்டால்
அருவநிலை பூரணத்தால் நான் ஒன்றென்றும்
அநேக உருவங்களாய் நான் பலவே என்றும்
ஒருமை தத்துவம் உணரும் ஆற்றலோடு
உடலில் சுழல்கின்ற இரத்தம் சுத்தமாகும்”.
[ஞாமும் வாழ்வும்]

“படிக்கும்போது தவம் செய்யலாமா; இரவில் செய்யலாமா?,” என்றெல்லாம் கேட்பார்கள். தவத்திற்குக் காலமும் வேண்டியதில்லை; திசையும் வேண்டியதில்லை. அறிவை, விரிவான பிரபஞ்ச இணைப்போடு இணைக்கக்கூடிய ஒரு பயிற்சி தான் தவம். அதற்கு கால நேரம் பார்க்க வேண்டியதில்லை. எந்தக் காலத்திலேயும் செய்யலாம். அதையெல்லாம் உணர்ந்து, நீங்கள் எவ்வளவு தூரம் ஆழ்ந்து தவம் செய்து வருகிறீர்களோ, அந்த அளவுக்கு, விவகாரங்களில் ஏற்படக்கூடிய சிக்கல்களை அறுத்துக் கொள்ளவும், தெளிந்த நிலையிலே அந்தச் சிக்கல்களை தீர்த்துக் கொள்ளவும், சிக்கல் வராமல் காத்துக் கொள்ளவும் வேண்டிய விழிப்பு நிலையை இந்தத் தவம் உங்களுக்குக் கொடுக்கும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

குருவின் தொடர்பு :

“உய்யும் வகைதேடி உள்ளம் உருகிநின்றேன்

உயர் ஞானதீட்சையினால் உள்ளொடுங்கி

மெய்யுணர்வு என்ற பெரும் பதம் அடைந்தேன்,

மேல்நிலையில் மனம்நிலைத்து நிற்க நிற்க

ஐயுணர்வும் ஒன்றாகி அறிவறிந்தேன்;

ஆசையென்ற வேகம் ஆராய்ச்சி யாச்சு

செய்தொழில்களில் கடமை உணர்வு பெற்றேன்

சிந்தனையில் ஆழ்ந்து பல விளக்கம் கண்டேன்.”

வீண் காலம் போக்க வேண்டாம் :

“நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து


நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு

அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்

ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி

என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க

இடமின்றி மவுனம் என்று இருந்தீர் போதும்

இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்

ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 24 : உயிர் உணர்வு

PREV      :  ஜூலை 22 : ஆட்சி முறை சிறக்க வேண்டும்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!