ஜூலை 05 : மன்னிப்பின் மேன்மை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மன்னிப்பின் மேன்மை :

“இப்போது ஒரு வினா எழுப்பலாம்; ஒருவர் ஒரு பெரிய கொடுமையை செய்கிறார் அவருக்கு எதிராகக் கூட சினம் கொள்ளக் கூடாதா? என்று கேட்கலாம். சினத்தினால் எங்கும் ஒரு நன்மையும் வந்ததாக இதுவரை வரலாறில்லை. தீயவர்களையும் கொடியவர்களையும் மன்னித்தால் தான் சிறந்தது. அன்றி பதிலுக்குப்பதில் அல்லது பழிக்குப்பழி என்று இறங்கினால் அதற்கு முடிவு எங்கே?

நமக்கு ஒருவர் கெடுதல் செய்தாலும் நாம் நம் வயம் இழக்கலாமோ? நம் வயம் இழந்தால் தானே சினம் வரும்? நாம் நாமாகவே இருந்தால் அதுவே அவருக்கு ஓர் பாடமாகி மீண்டும் இத்தகைய தீங்கு செய்யாதிருக்க ஒரு நல் வாய்ப்பாகும்.

இன்னும் ஒரு படி மேலே சென்று தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்துவிட வேண்டுமென்றும் நமது பெரியோர்கள் கூறியிருக்கிறார்கள். அவ்வாறு செய்தால் சினத்திற்கு அங்கு இடமே இல்லை.

அப்படி நமக்குத் துன்பஞ் செய்தார் மேலும் சினம் கொள்ளாததோடு அவருக்கு நன்மையையும் செய்யவில்லை என்றால் அருள்துறையில் இருந்து என்னபயன்? சினம் ஒழிந்த இடத்தில் தான் இந்தப் பெருந்தன்மை வரும்.

நான் எவ்வளவோ பொறுமையாகத்தான் இருந்தேன். எனக்கு சினம் வரும்படியாகப் பண்ணிவிட்டார்கள் என்று சொல்லித் தப்பிக்க முயல வழியில்லை.பொறுமைக்கு எல்லை உண்டு என்பது சுத்தத் தவறு. பொறுமைக்கு எல்லை, வரையறை செய்தால் அது தான் வஞ்சம். ஏன், பொறுமை கடலினும் பெரிது எனும் கருத்துங்கூடத் தவறுதான். பொறுமையை எந்த அளவுக்கும் உள்ளடக்க முடியாது. எல்லை என்பதே இல்லா இறைநிலையைப் போலவே எல்லை என்பது இல்லாததே பொறுமை.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

“செயலிலே விளைவாகத் தெய்வ ஒழுங்கமைப் பிருக்கப் பயனென்ன

தவறிழைத்துப் பரமனைப் பின்வேண்டுவதால்?”

தன் குற்றம் உணர பிறர் குற்றம் மன்னிப்பாம் :

“தன் குற்றம் குறை கடமைத் தன்னுள் ஆய்ந்து

தான் கண்டு தனைத் திருத்தும் தகைமை வந்தால்,

ஏன் குற்றம் பிறர்மீது சுமத்தக் கூடும்

ஏதேனும் கண்டாலும் மன்னித்தாலும்

மேன்மைக்கே மனம்உயரும்; பிறர் தவற்றால்

மிக வருத்தம் துன்பமது வந்த போதும்,

நன்மைக்கேயாம் செய்த பாபம் போச்சு

நான் கண்ட தெளிவு இது நலமே பெற்றேன்.”

எல்லார்க்கும் உதவி செய்வோம் :

“தற்பெருமை பேசுபவர் தன்முனைப்பு மீறி

தவறென்று பிறர் செயலைப் பிறரை குறைகூறும்


அற்பமனம் உடையோர்கள் சிலர் இருப்பார் நம்மில்

அன்புகொண்டு அவர்களையும் அரவணைத்தே நமது

சொற்கனிவால் வாழ்த்தி அவர் சிந்தனையை உயர்த்தி

சூச்சுமமாய் அவர் உயிரை அறிவையறிந்துள்ள

நற்பணியைச் செய்திடுவோம் சமுதாயத் தொண்டாம்

நம் தகைமை பொறுமைகளைச் சோதிக்க வாய்ப்பாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூலை 06 : அலையின் தொடர்பு

PREV      :    ஜூலை 04 : மனிதனே தெய்வம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!