வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
இயற்கை என்ற சொல்லின் பெருமதிப்பு :
1) ஆதியெனும் இருப்பு நிலை [சுத்தவெளி]
2) இருப்பு நிலையின் தன்னடக்க ஆற்றலால் தானே துண்டுபட்டு நுண்ணிய அளவில் தற்சுழல் அலையாக எழுச்சி பெற்று இயங்கும் பரமாணு.
3) பரமாணுவின் சுழற்சி விரைவால் எழும் விரிவலை இருப்பு நிலையான சுத்தவெளியோடு இணைவதால் ஏற்படும் வான் காந்தம்.
4) பரமாணுக்களின் கூட்டு இயக்கத்தால் உண்டாகிற நெருப்பு, நீர், நிலம் ஆகிய நான்கு நிலைகளோடு பரமாணு நிலையும் சேர்க்க விளங்கி நிற்கும் ஐந்து பௌதீகப் பிரிவுகள் [பஞ்ச பூதங்கள்]
5) ஓரறிவு உயிரின தாவரங்கள் முதல் ஆறறிவுடைய மனிதன் வரையில் உள்ள உயிரினங்கள் இவை அனைத்தையும் சேர்த்து, ஒன்றுபடுத்திக் கூறப்படும் சொல் தான் இயற்கை எனும் பெரு மதிப்புடைய சொல்.
இயற்கையின் ஆதி நிலையான இருப்பு தனக்குள் அடங்கிய ஆற்றலால் மலர்ச்சி பெற்று, வெவ்வேறாகக் காட்சியாகும் பரிணாம சரித்திரத்தில் ஒவ்வொரு நிலையையும் மற்றொன்றிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் குறிப்புகளே எந்த மொழியிலும் அடங்கிய சொற்களாகும்.
அளவிட முடியாத ஆற்றலுடைய இப்பேரியக்கப் பெருங்களமான இயற்கையைப் பகுத்துப் பகுத்தும் தொகுத்துத் தொகுத்தும் உணரக் கூடிய சிற்றறிவு, பேரறிவு, முற்றறிவு, என்ற மூன்று நிலைகளையும் அறிவின் சிறப்பாகப் பெற்றவன் மனிதன். இவ்வளவு சிறப்பையும் இயற்கையாலும், தன் செயலாற்றலாலும், சிந்தனை உயர்வாலும் பெற்ற மனிதன் ஏன் வாழ்வில் துன்பங்களையும், சிக்கல்களையும் அனுபவிக்க வேண்டும்?
இந்தச் சிந்தனையின் மூலம் மனித ஆற்றலையும், பிறவியின் நோக்கத்தையும் உணர்ந்து வேண்டிய இடத்தில், காலத்தில், அளவில் தனது ஆற்றல்களைப் பெருக்கிக் கொண்டு, பயன்படுத்திச் சிறப்பாக வாழ வழி காண வேண்டும். இதற்குத் தவமும், அறமுமே உதவும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * *
“பேரியக்க மண்டலத்தைத் தத்துவங்கள்
பத்தாக விளங்கிக் கொள்வோம்.
பெரியசுமை மனதிலிருந் திறங்கிவிடும்
மனம்அறிவாம் சிவமு மாகும்.
ஓரியக்க மற்றநிலை வெட்டவெளி.
இருப்பதுவே ஆதி யாகும்.
உள்ளமைந்த ஆற்றலே உருண்டியங்கும்
விண்ணாகும். அதிலெ ழுந்த
நேரியக்க விரிவுஅலை நெடுவெளியில்
கலப்புற வான் காந்த மாச்சு.
நிகழ்காந்தத் தன்மாற்றம் அழுத்தம் ஒலி
ஒளி சுவையும் மணம் மனம் ஆம்.
சீரியக்கச் சிறப்புகளை விளைவுகளை
உள்ளுணர்ந்தால் அது மெய்ஞ் ஞானம்.
சிந்திப்போம் உணர்ந்திடுவோம் சேர்ந்திருப்போம்
இறைநிலையோ டென்றும் எங்கும் “.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஜூன் 25 : அறிவின் முழுமை
PREV : ஜூன் 23 : இயற்கையிலேயே தியாகிகள்