ஜூன் 14 : முற்றறிவு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


முற்றறிவு:

“ஆதிநிலையில், இருப்புநிலையாக சுத்தவெளியாக உள்ள முற்றறிவைத் தவிர வேறு எதுவும் இல்லை. இதே அறிவு தான் பரமாணுவாக மலர்ச்சி பெற்ற நிலையின் – தன்மை, துல்லியம், இயக்க ஒழுங்கு என்கிற இயக்க நியதியாக இருக்கிறது.

பரமாணுக்களின் கூட்டு, இயக்க வேறுபாடுகள், அடர்வு நிலைக்கேற்ப தன்மை, துல்லியம், ஒழுங்கு என்ற மூன்றும் பருப்பொருள்களில் வேறுபடுகின்றது.

இருப்புநிலையாக, சுத்தவெளியாக இருக்கும் வரையில் அறிவானது எல்லையற்ற தன்மையினாலும், புலன் கருவிகளின்மையாலும் உணர்வற்ற தன்மையாக அசைவற்று இருக்கிறது. எனினும், அது அணு முதல் அண்டம் ஈராக அனைத்துக்குள்ளும் ஊடுருவி இயங்கிக் கொண்டிருக்கிறது. உயிரினங்களில் புலன் கருவிகளின் எண்ணிக்கைக்கேற்ப அறிவானது உணர்தல் என்ற தன்மைபெற்று இயங்குகிறது.

உணர்தலில் கூட மூன்று இயக்கநிலை உண்டு. அவை: 1) உணர்தல் 2) அதனாலேயே (அனுபவம்) இன்ப துன்ப அனுபவமடைதல் 3) ஒன்றோடு ஒன்று, ஒரு இயக்கத்தோடு ஒன்று பிரித்துணர்தல், இவற்றை ஆங்கிலத்தில் Cognition, Experience, Discrimination என்று வழங்குகிறோம்.

இதே அறிவு மனிதனின் ஆறாவது நிலையான சிந்தனை அறிவாற்றலாக, இயற்கையின் முழுமையை உணர்ந்துகொள்ளத் தகுந்த பேராற்றலாக, தன்மூலமும் முடிவும் அறிந்து, தான் யார் என்ற தன்னிலை விளக்கமடையும் சிறப்பாற்றலாக உயர்வு பெறுகிறது.

அப்படி உயர்வு பெற்ற நிலையில், அறிவை அறிந்த வழக்கத்தில், உடலாக, உயிராக, உணர்வாக அவற்றின் முடிவில் பரமாக இருப்பவன் எவனோ, அவனே நான். “நான்” எனப்படுபவனே “அவன்” எனப்படுகிறான், தெய்வம் எனப்படுகிறான், ஆதிஎனப்படுகிறான், பிரம்மம் எனப்படுகிறான். அவனை விடுத்துத் தனியே ஒரு நிகழ்ச்சியும் இல்லை. ‘அவனே நான்’ ‘நானே அவன்’ என்ற தெளிவே, ஆன்மாவின் நிலையும் அதன் இயல்பும் அறிந்த தத்துவ விளக்கமே, அறிவையறிந்து அறவழி பிறழாது வாழும் உயர் நெறியே ‘ஞானம்’ என்றும் ‘முழுமைப்பேறு’ என்றும் வழங்கப்பெறுகின்றது.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“உடலுக்குள் உயிர், உயிருக்குள் அறிவு, அறிவுக்குள்

அருட்பேராற்றலின் இயற்கை மெய்பொருள்”.

“உயிர் என்பது பிரபஞ்சத் தோற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையான இயக்க

மூலக்கூறு ஆகும்”.

“மணியின் ஓசை போல, பூவின் மனம் போல,

நெருப்பிலே வெளிச்சம் போல, உயிரின்

ஆற்றலே அறிவாக விளங்குகிறது”

இணைந்துணர் இன்பம் :

“முற்றறிவு சுத்தவெளி மூல ஆற்றல்


முதற்பொருளாய் இருந்த சிவம் உயிர்களூடே

பற்றறிவாய்த் தேவை பழக்கம் சூழ்ந்த

பலநிலைகட் கேற்ப ஐந்து புலன்கள் மூலம்

கற்றறிவாய் விரைவு பருமன் தூரம்

காலம் என்ற கணக்குகளாய் எல்லைகட்டிச்

சிற்றறிவாய் இயங்கு திருவிளை யாட்டைத் தன்

சிந்தனையால் உணர் இன்பம் சிவயோகம் ஆம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜூன் 15 : எண்ணம்

PREV      :  ஜூன் 13 : கால வேகம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!