ஜனவரி 20 : மனம், உயிர், தெய்வநிலை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


மனம், உயிர், தெய்வநிலை :

“மனம், உயிர்,தெய்வநிலை ஆகியவை மறைபொருள்கள், அவற்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது. புலன்களைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். புலன்களுக்கு உபகருவிகள் துணையைக் கொண்டு அறிவது விஞ்ஞானம். அறிவைக் கொண்டு ஆராய்வது மெய்ஞ்ஞானம்.

உடலைப்பற்றி நிறைய அறிந்து வைத்திருக்கிறோம். மனதைப் பற்றியும் அறிய வேண்டும். இந்த ஆராய்ச்சி உயிரைப் பற்றி அறிவதில் கொண்டுபோய் விடும். உயிரைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு தன்னிலை விளக்கத்தில் முடியும்.

இந்த இடமே எல்லா ஆராய்ச்சிகளின் முடிவு. அருள்துறைக்கு உயிர் என்ற சொல்லை மையமாக வைத்து ஆன்மிகம் [ஆங்கிலத்தில் கூட …… Spirit ……. Spiritualism] என பெயர் வைத்திருக்கிறார்கள்.

தன்னை அறியாதவரை மனதிற்கு அமைதி இல்லை. ஏனெனில் இந்தப் பிறவி எடுத்ததின் நோக்கமே தன்னை அறிவதற்காக எடுக்கப் பெற்றதே. தன்னை அறிய தத்துவ விளக்கங்கள் உதவியாகத் தான் இருக்கும்.

ஆனால் தன் மூலத்தை தானே எட்டி, உள்ளுணர்வாக, அகக் காட்சியாக அறிய யோகமே துணை செய்யும். அந்த யோகத்தை இக்காலத்திற்கேற்ப எளிமைப்படுத்தப் பெற்றதே எளிய முறை குண்டலினி யோகம் என்னும் மனவளக்கலை.

இதனை மாணவர்கள் பயில்வதால், அறிவுத் தெளிவும், கடமையுணர்வும் பெறலாம். படிப்புக்கும் நன்மை தரும். பிற்கால வாழ்க்கையின் உயர்வுக்கு இப்போதே அஸ்திவாரம் அமைத்ததாகும்.

படிப்புக்கோ, வேறு அன்றாட காரியங்களுக்கோ சிறிதும் இடையூறின்றி மனவளக்கலை பயிலலாம். இதற்கு ஒதுக்கிய சிறிது நேரம், படிக்க ஒதுக்கும் பெரிய நேரத்தையும் குறைக்க உதவும். மனம் செம்மையும், பிரகாசமும் பெறும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

அகத்தவத்தின் பெருமை :

“உயிருணர்வே ஆன்மாக்கள்

உய்யவழி காட்டும்.

உள்நாடி அமைதிபெற

உண்மை தெளிவாகும்.”

தியானமும் ஒழுக்கமும் :

“மூச்சிழுத்துக் கும்பித்து உடல் வருத்தி

மூலத்தீ மூட்டுகின்ற சிரமம் வேண்டாம்.

ஆச்சரியமோ திகைப்போ இன்றி, மக்கள்

அறிவின்நிலை அறிந்திடுவார் கருதவத்தால்;

தீச்செயல்களாம் பஞ்ச பாதகங்கள்

செய்வதற்கே சூழ்நிலை இருந்திடாது.

பேச்சினிலே எவருக்கும் கனிவிருக்கும்

பேரன்பின் வழி செயலே பெருகிநிற்கும்.”

தவத்தின் மதிப்பு :

“குறைபோக்கும் குண்டலினி தவத்தின் மூலம்

குவிந்து மனம் உயிரோடு உறையும் மேலும்


மறை பொருளாம் அறிவு அதன் முழுமைபெற்று

மா அமைதி அனுபவிக்கும் நிலைக்களம் ஆம்;

இறைவனது திருநிலையில் இணையும் அப்போ

இன்ப துன்ப விருப்பு வெறுப்பிவை கடந்து

நிறைவு பெறும் தீய வினையகலும் வாழ்வில்

நிகழ்வதெல்லாம் பேரின்ப ஊற்றாய் மாறும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 21 : அறிஞர்களின் அனுபவங்கள்

PREV      :  ஜனவரி 19 : சாதனை தான் பயன் தரும்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!