ஜனவரி 17 : குழந்தை வளர்ப்பு

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


குழந்தை வளர்ப்பு:

ஒரு குழந்தையின் உற்பத்தியானது பெற்றோர்களுடைய உடல், உயிர், அறிவு இவற்றின் தரத்திற்கு ஏற்றவாறுதான் அமையும். பெற்றோர்களுடைய வினைத்தொடரே குழந்தை. நல்ல குழந்தை வேண்டுமானால் பெற்றோர்கள் உடலை, உயிரை, அறிவைச் செம்மையாகப் பேணிக் காக்க வேண்டும்.

தவம், உடற்பயிற்சி ஆராய்ச்சி இவற்றால் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும்.அமாவாசை, பௌர்ணமி தினங்களிலும் போதைப் பொருட்களை உட்கொண்ட மயக்கத்திலும், இருவரில் ஒருவர் வருத்தமாகவோ, நோயுற்றோ இருக்கும் நாளில் ஒரு குழந்தை கருத்தரிக்குமேயானால், அது உடலிலும், அறிவிலும், தரம் குறைந்ததாகவே அமையும்.

மேலும் குழந்தை கருவுற்றிருக்கும் காலத்தில் தாயின் மனம் உற்சாகமாக இருக்கும்படி அந்தக் குடும்பத்தினர் பார்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய அறிவின் விழிப்பில் உற்பத்தியாகும் குழந்தை, உடல் அறிவு நலன்களோடு, குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் பெரும் நலம் விளைக்கத்தக்க நல்நிதியாக அமையும்.

பிறந்த பிறகும் வளர்க்கும் முறையில் மிகவும் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். அந்தக் குழந்தை எந்த எந்தச் செயலில் ஈடுபடக் கூடாது என்று நினைக்கிறோமோ, அந்தச் செயல்களைப் பெற்றோர்கள் குழந்தையின் எதிரில் செய்யவே கூடாது.

கடைசியாக மக்களுக்குச் சொத்து சேர்த்து வைக்க வேண்டும் எனபது இந்த விஞ்ஞான காலத்தில் அவசியமில்லை. அவர்களுக்கு, வாழ்வதற்கு ஏற்ற கல்வியை கற்பித்து வைத்தால் அதுவே அழிக்க முடியாத பெரும் சொத்தாகும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

தத்துஞானி வேதாத்திரி மகரிஷி .

* * * * * * * * * * * * * * * * * * * * * * * *

 

சிறந்த சீர்திருத்தம் :

“குழந்தைகளைக் கொண்டுலகைச் சீர்திருத்தக்

கொடுமையின்றி கருத்து செயல் இரண்டும் வாழ்வில்

இழைந்துயரும். படிப்படியாய் உலகம் உய்யும்.

இது உலக சமுதாய சங்க நோக்கம்.”

குழந்தை வயதிலேயே சீர்திருத்தம் ஆரம்பமாக வேண்டும் :-

“வழக்கத்தை மாற்றி சீர்திருந்தி வாழ

வலிவு முதலில் மனதில் அமைய வேண்டும்;

பழக்கத்திற் கேற்றபடி செயல் கருத்து

பதிவாகி மக்களுக்குப் பல கோணத்தில்

ஒழுக்க உணர்வோடு நீதி இன்பம் நேர்மை

உயர்வு எனும் சொற்களுக்கு அர்த்தம் காணும்

இழுக்கில்லா முழுத்திருத்தம் உலகில் காண

ஏற்றவழி குழந்தைகளைப் பண்படுத்தல்.”

பெற்றோர் தவம் பிள்ளைகள் நலம் :


“பெற்றோர்கள்வழி வாழ்க்கைமுறை தொடர்ந்து

பிள்ளைகளின் உடல்வளமும் அறிவும்மாகும்;

பெற்றோர்கள் நலம்அமைந்த மக்கள் வேண்டில்

பிழைநீக்கும் தவம்அறமும் ஆற்ற வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 18 : மகளிரும் ஆன்மீகமும்

PREV      :  ஜனவரி 16 : வாழ்த்து

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!