ஜனவரி 08 : அளவான தேவை

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்!!


அளவான தேவை:

தேவையை பெருக்கிக் கொண்டே செல்லக்கூடாது. பெருக்கினோமானால் அனுபோகத்திலேயே மனம் சென்று கொண்டிருக்கும்.

பழிச்செயல் புரிந்து மேலும் மேலும் பிறவித் தொடர் நீளும். தேவைகளை முடிந்தவரை ( to the minimum) சுருக்க வேண்டும்.அப்போது தான் வந்த வேலையை முடிக்க முடியும்.

வந்த வேலை எது? முறையோடு வாழ்ந்து பாவப்பதிவுகளை எல்லாம் அழித்து, இனிப்பழி புரியாத தகைமை பெற்று, தன்னை அறிந்து, அறிவில் முழுமையை அடைந்து, ஆசைகள் எல்லாம் ஒழிந்த நிறை மனம் என்னும் நிர்க் குணம் வந்து, முக்தி பெற வேண்டியதன்றோ வந்த வேலை? அந்த வேலைக்கு இடையூறான இந்த ஆசையை முதலில் ஒழுங்கு செய்தாக வேண்டும்.

நல்ல விருப்பங்களின் மேலும் உணர்ச்சி வேகப் பிடிப்பை மாற்றியாக வேண்டும்.துய்ப்புப் (அனுபோகப்) பொருட்கள் குறையக் குறைய உடல்நலம் காக்கப் பெரும்.

இங்கொரு ஆளை, அடுத்த ஊரில் ஒரு கம்பெனி, இன்னொரு ஊரில் உற்பத்திச் சாலை, அங்கே ஒரு விவசாயப் பண்ணை, நான்கு வீடுகள், இரண்டு எஸ்டேட்டுகள் என்றெல்லாம் சொத்துக்கள் பெருகாமல் பார்த்துக் கொண்டால் உடல் நலத்தோடு மன அமைதியும் காக்கப்பெறும்.

நமது பொறுப்பிலும் பராமரிப்பிலும் இருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாக இருந்ததால் அந்த அளவில் நமது சுதந்திரம் காக்கப் பெரும்.

அனுபோகப் பொருட்கள் மிக மிக உடல் நலம் கெடும். சொத்துக்களின் எண்ணிக்கை மிக மிக மன அமைதி கெடும். பாதுகாக்கப்பட வேண்டிய குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை மிக மிக சுதந்திரம் கெடும்.

அதே சமயத்தில் நமது கடமைகளையும் பொறுப்புக்களையும் அலட்சியம் செய்யவோ தள்ளிவிடவோ கூடாது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

**************************************

 

வினைப் பிரிவு:

“முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு.

மூளையிலே உன் செயலின் பதிவனைத்தும் உண்டு.

பின்னே நீ செய்வினைக்குப் புலனைந்தும் இயக்கிப்

பெற்றப் பழக்க பதிவு உண்டு இம் மூன்றும்

உன்னைநீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி

ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்

தன்னில் பதிவான வினைப் பதிவுகளை மாற்ற


தணிக்க பொருள் செல்வாக்குப் பயனாகா துணர்வீர்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்..

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஜனவரி 09 : குரு தானாக வருவார்

PREV      :  ஜனவரி 07 : எண்ணத்தின் ஆற்றல்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!