வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.
ஞான வாழ்வு :
.
“யாரும் ஞானத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணிக்க தேவையில்லை; காஷாயம் தரித்து காடேக வேண்டியதில்லை; வாழ்வதற்குத் தான் ஞானம் பயன்படவேண்டும் என்ற உண்மையை விளக்க முற்பட்டேன். விஞ்ஞானம் இன்று நம்மிடம் மிகுந்திருக்கலாம். அதெல்லாம் புலன்களுக்கான உப கருவிகளைத் தான் உண்டாக்க பயன்படுத்தப்பட்டது. உன்னை நீ யார் என்று தெரிந்து கொள்ள வேண்டுமாயின் அதற்கு எந்த உபகருவியும் பயன்படாது. நீ உன் உள் ஒடுங்கித்தான் பார்த்தாக வேண்டும். இப்பயிற்சி பகுத்தறிவோடு தொகுத்துணர்வு என்றும் சிறப்பை அளிக்கும்; அறிவு விரிந்த நிலையில் ஒவ்வொரு செயலையும் திறமையோடு ஆற்றி ஆற்றி வெற்றி பெறும்.
.
ஆகவே தான் செய்யும் ஒவ்வொரு செயலும் மற்றவர்களைப் பாதிக்கும் என்பதையும் தன்னியக்கம் தொடர்பியக்கம், பிரதிபலிப்பு இயக்கம், எதிரியக்கம், விளைவு ஆகியவை மூலம் தன் செயலின் பயன் தன்னையே நோக்கித் திரும்பி வரும் என்ற பேருண்மையும், காரண காரிய விளக்கமும் மனத்திற்கு தெளிவாகப் புரியவரும். ஆக மனம், அதற்கு மூலமானது உயிர், அதற்கும் மூலமான இருப்பு நிலை மெய்ப்பொருள், என்ற உண்மை விளக்கம் பெற்றால் தான், தன்னிடம் பிரகாசிக்கும் அதே மெய்ப்பொருள் தான் எவ்விடத்தும் எவரிடத்தும் இருந்து பிரகாசிக்கிறதென்கிற விழிப்பேற்படும். இந்த விழிப்பைத் தந்து முறையான பயிற்சி மூலம் முழுமைப் பேறடையச் செய்யும் பெரு நெறியே எளிய முறைக் குண்டலினி யோகம்”.
.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * * *
முயற்சியளவே ஞான விளைவு :
“வித்து, நிலம் உரம் தண்ணீர் காவர்கேற்ப
விளைவுதரும்; அதுபோல உனக்கு ஆசான்
அத்துவித தத்துவ வித்தறிவி லிட்டால்
அதற்கொழுக்கம் என்ற உரம், அறிவை ஒன்றும்
நித்த தவம், ஆராய்ச்சி என்ற தண்ணீர்
நீ சலனமுற்று அறுகுணங்களாகா
வித்தை எனும் காவல், இவையனைத்தும் வேண்டும்
விளைவாக நீயடையும் கனியே ஞானம்”.
.
சுவாச அப்பியாசத்தால் மாத்திரம் ஞானம் உண்டாகி விடாது :
“இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர் ?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை;
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்,
அதற்கு இடம் உனது இருபுருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்”.
.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.