செப்டம்பர் 18 : மன அமைதி

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


மன அமைதி :

“முதலில் மனம் என்பது யாது அதன் அமைதி குலையக் காரணம் என்ன என்பதை சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதேனும் ஒரு தேவை இருக்கவே செய்கிறது. அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள நிறைவு செய்து கொள்ள ஆசை எழுகிறது. அதற்கு முயற்சி செய்ய வேண்டி ஏற்படுகிறது. முயற்சியால் வெற்றியடைகிறான். அதன் பயனை அனுபவிக்கிறான். அது இன்பமோ துன்பமோ கொடுக்கிறது. அந்த செயலை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருகிறான். இது மனதில் பதிவு செய்யப்படுகிறது.

இப்படி உணர்ச்சி, தேவை, முயற்சி, செயல், விளைவு, அனுபோகம், அனுபவம், ஆராய்ச்சி, தெளிவு, முடிவு என்று 10 படித்தளங்களில் விரிந்து செயல்படும் உயிரின் படர்க்கை நிலையே மனமாகும். ஆகவே இந்த மனதை முதலில் ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இயற்கையமைப்புக்கு ஒத்து மனம் செயல்படும்படி பழக்க வேண்டும். இயற்கைக்கு முரண்பட்ட செயலை தவிர்க்க வேண்டும். விளைவை நன்றாக கணித்துக் கொண்ட பிறகே செயல்படத் துவங்க வேண்டும்.

நம்மிடம் பெரும்பாலும் பொருள் வயப்பட்ட உணர்வே தலை தூக்கி நிற்கிறது. புலன் வயப்பட்டு ஆசாபாசங்களுக்கு அடிமையாகி மயக்கத்தில் செயலாற்றுகிறோம். அதனால் துன்பம் விளைந்து அமைதி குறைகிறது. பலகோடி அணுக்கள் சேர்ந்த கூட்டியக்கமான உடல், இந்த உடலில் இயங்கும் உயிர், உயிரின் படர்க்கையாற்றலான மனம், இவற்றின் இயக்கத்தை உணரும் அறிவு இவையாவுக்கும் மூலாதாரமான பரம்பொருள், இவற்றைப் பற்றிய தெளிவான விளக்கத்தை ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.


உடலில் ஆறாவது அறிவாக இருக்கும் மனம், பரம்பொருளை உணர்ந்து முழுமையடையும் பொருட்டே எழுச்சி பெற்றுள்ளதாகும். இந்த மனத்தைப் பண்படுத்த எழுந்ததுவே அறமும் மதமுமாகும். பிற உயிர்படும் துன்பத்தை ஒத்து உணர்ந்து அதைப் போக்க வேண்டுமென்று எழுந்த கருணை உணர்வே அறமாகியது. தன்னலம் கருதி மயக்க நிலையில் புலன் வயப்பட்டு காமம், கோபம், பேராசை, கடும்பற்று, அகந்தை, வஞ்சம் என்ற ஆறு குணங்களாக மாறி செயல்படுவதால் தான் துன்பம் எழுகிறது. இத்துன்பத்திலிருந்து மீள வேண்டுமானால் மனவிரிவு வேண்டும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * * * *

“அனைத்தியக்கப் பேராற்றல் பிரம்மம்தெய்வம் என்போம்,
அறிந்தவர்கள் அவ்வாற்றல் வழிவாழ்வோ ரெல்லாம்
முனைப்பொழிந்த ஞானியென்றும் முனிவரென்றும் பலபேர்
முன்னாளில் சொல்லியுள்ளார்; முற்றுணர்ந்த தெளிவால்
வினைப்பதிவில் தீயவற்றை வேரறுத்து வாழ்வில்
விலங்கினத்தின் செயலொழித்து விழிப்போ டறநெறியில்
அனைத்துலக மக்களும்மெய் யறிவுடனே வாழும்
அந்த பெரும் நந்நாளை வாழ்த்திவர வேற்போம்”.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!