செப்டம்பர் 12 : எண்ணம் எங்கும் செல்லும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


எண்ணம் எங்கும் செல்லும் :
.

“எண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும்போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்க வேண்டும். அதற்கு ஒரே வழிதான் உண்டு. நல்ல எண்ணங்களை – நாமே விரும்பி முயன்று மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை விழிப்புடன் ஓட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
.

எண்ணத்தை ஆராய்ச்சியிலும் தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது, அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும் அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்.
.


எண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும் உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும் உயர்வும் உருவாகின்றன. எனவே எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி? எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.”
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * * *
.
முளைக்கும் போதே கிள்ளிவிடு:

“கள்ளம், சோரம், கடன், குடி, பெரும்பாலும்
மெள்ள அதிகரிக்கும் விஷமொக்கும் இயல்புடைத்து.
உள்ள சுகம் போக்கும், உயிரையும் பலிகொள்ளும்,
கிள்ளி எறிவோம் கிளைக்கும் போதே இவற்றை.”
.

ஒடுங்கி-உணர்ந்திடு:

“”நினைவை யடக்க நினைத்தால், நிலையா.
நினைவை யறிய நினைத்தால், நிலைக்கும்.”
.

தினக் கடன்:
“உனக்கும் நல்லதாய், ஊருக்கும் நல்லதாய்,
நினைப்பதும், செய்வதும் நித்தியக்கடன்.”
.

பண்புப் பயிற்சி :

“விழிப்பு நிலை என்ற ஒரு வெளிச்சம் கொண்டு
விருப்பு வெறுப்பெனும் சுழலில் அலைமனத்தின்
அழுக்கைத் தற்சோதனையால் துடைத்து வந்தால்
அன்பூறும் கடமை யுணர்வாகும் வாழ்வு;
பழுத்துவரும் அறிவு அந்தப் பக்குவத்தால்
பலப்பலவாய் வாழ்வில் வளர் சிக்கல் தீரும்,
முழுக்கல்வி இது, உண்மை அறிவிற்கு எட்டும்
முறையாகப் பயின்றிடுவீர் வெற்றி காண்பீர் ! ”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!