செப்டம்பர் 06 : நூலோர் வளி முதலாய் எண்ணிய மூன்று

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


நூலோர் வளி முதலாய் எண்ணிய மூன்று :
.

“மனித உடலின் அமைப்பையும் அதன் இயக்கங்களையும் குறித்து முதலில் நாம் தெரிந்து கொள்வது நமக்கு மிகவும் நன்மை பயக்கும்.
.

மானுட உடல் இயங்குவதற்கு உயிர்ச்சக்தி முக்கியமானதாக மூலகாரணமாக இருக்கிறது. உயிர்ச்சக்தி தங்கும் ஒரு பாத்திரம் போல் உடல் அமைப்பு இருக்கிறது. மனித உடலை நுணுகி ஆராய்ந்து நோக்கினால் பஞ்சபூதங்களின் அமைப்புக்கு இயைய ஐந்து அடுக்குகளாக இருப்பது தெரிய வரும். பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என உடலமைப்பு பருப்பொருளாகவும், இரத்தம் நீர்ப்பொருளாகவும், சூடு மின்சாரமாகவும், பிராண வாயு காற்றாகவும், ஆகாசம் உயிர்ச்சக்தியாகவும் இருக்கின்றன. நீர், நெருப்பு, காற்று இந்த மூன்றும் சேர்ந்து பருப்பொருளான உடலையும் நுண்பொருளான உயிர்ச்சக்தியையும் இணைத்து நட்போடு இயங்கச் செய்கின்றன.
.

இந்த மூன்று பொருட்களின் இயல்பான அளவும் தரமும் குறையுமாயின், அவற்றின் சுற்று இயக்கத்துக்குத் தடை நேருமாயின், உடலின் உயிர்ச்சக்தி அதாவது மின்சார சக்திக்குத் தடை ஏற்பட்டு மின்சார ஓட்டம் தடைப்பட்டு உடலின் சிறுசிறு தசைப் பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் வலியும் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன. இத்தகைய சீர்குலைவு ஏற்படும்போது அதை வலி என்கிறோம். சீர்குலைவும் வலியும் அதிகரிக்குமாயின் அந்த அளவுக்கு உயிர்ச்சக்தியின் களைப்பு அதிகரித்து விடுகிறது. இந்தச் சீர்குலைவு பெரும் அளவில் ஏற்பட்டு உயர்ச்சக்தி குறைந்துவிடுமாயின் உடலின் இயக்கம் தடைப்பட்டு அப்படியே நின்றுவிடுவதையே மரணம் என்கிறோம்.”
.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

.* * * * * * * * * * * * * * *

உயிர் விளக்கம் :

“உடல் உயிர் இரண்டிற்கும் வித்தே மூலம்
உட்பொருளே மெய்ப்பொருளாம் உண்மை தேர்வீர்
உடல் என்ப தணுக்கள் பலசேர்ந்த கூட்டு
உயிர் என்பதோ அணுவின் நுண்துகள் ஆம்;
உடல் ஊடே உயிர் சுற்றிச் சுழன்றியங்க
உணர்ச்சி யென்ற விளைவுண்டாம் அறிவு ஈதே
உடலை விட்டு உயிர் பிரிந்தால் அறிவங்கேது
உடல் வாழ்விற்குள் தான் இன்பம் துன்பம்”.
.

“மரணத்தை எதிர்நோக்கப் பிறந்த நாமோ
மதிப்பிலே இன்பதுன்பம் அனுபவித்து
மரணமென்ற இரத்த ஓட்ட நிருத்தத்தின்பின்
மறந்துவிடுவோம் பின்னர் ஒன்றாய்ப் போவோம்;
மரணத்திற்கிடையே நம்தேவை எல்லாம்
மனித இனக் கூட்டுறவால் கிடைக்கக் கண்டோம்
மரணத்திற் கஞ்சாமல் மறந்திடாமல்
மதி உடலின் இயல்பறிந்து கடமை செய்வோம்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!