செப்டம்பர் 04 : அறிவை அறியத் தகுதியும் முறையும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


அறிவை அறியத் தகுதியும் முறையும் :
.

“அறிவை அறிய ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னையறிந்து முடிக்கும் வரையில் அமைதி பெறாது. எனவே, அவ்வார்வம் எழுச்சி பெற்ற அனைவரும் அறிவை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகம் மூலமாகவோ வெறும் விளக்கங்கள் மூலமாகவோ அறிவுதனையறிந்து கொள்ள முடியாது. முறையான அகநோக்குப் பயிற்சி தேவை. தகுந்த வழிகாட்டி மூலமே இது எளிதில் கிட்டும்.
.

உயிர் ஆற்றலை உள்ளுணர்வாகப் பெற்றால் தான் அறிவு, படர்க்கை நிலையொழிந்து உயிராகி நிற்கும். அதன் பிறகு, மேலும் ஒடுங்கி நிற்கப் பரமாகியும் அனுபவம் பெறும்.
.

இவ்வாறு, தானே தன்மலர்ச்சி நிலைகள் ஒவ்வொன்றையும் உள்ளடக்கமாகக் கடந்து, முடிவில் தன்னையே மெய்ப் பொருளாக உணர ஏற்ற சாதனை தான் அகத்தவம் ஆகும். இதனை யோகம் என்றும் கூறுகிறோம்.
.

தானே அனுபவத்தால் தன்னை மெய்ப்பொருளாக உணரும் நிலையே மெய்ஞ்ஞானம் ஆகும்., மெய்ஞ்ஞானம் மக்களிடையே மலரும் அளவிற்கு உலகில் அமைதியும் இன்பமும் ஓங்கும். எனவே நமது கடமைகளில் “மெய்ஞ்ஞானம்” உலகில் மலர ஏற்ற தொண்டினை மேன்மையுள்ள ஒன்றாக மதித்து செயலாற்றுவோமாக.”
.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * *
.
உயிரை உணர்தல் :

“தெய்வநிலை அறிந்தோர்கள் கோடி என்றால்
தெளிவாக அறிவறிந்தோர் ஒருவராகும்;
தெய்வநிலை யதனை வெளி, பிரம்மம் என்று
தேர்ந்த சில வார்த்தைகளால் விளக்கலாகும்;
தெய்வமே உயிராகி அறிவாய் ஆற்றும்
திருவிளையாடல் தன்னை உணர்ந்து கொண்ட
தெய்வர்கலல்லால் மற்றோர் உயிரைப் பற்றித்
திருத்தமுடன் உரைப்போர் யார் வாரீர்சொல்வேன்”.
.

மனிதனும் தெய்வமே :

“மனமது இயற்கையின் மாபெரும் நிதியலோ
மனதைத் தாழ்த்திட மயக்கத்தால் துன்பமே
மனதை உயர்த்திட மட்டிலா இன்பமே
மனதிலே உளஎலாம் மற்றெங்கே தேடுவீர்;
மனம் புலன் உணர்வில் மயங்கிட மாயையாம்
மனம் உயர் வெளியினில் மருவித் தோய்ந்திட,
மனம் விரிந்தறிவெனும் மாபதம் எய்திடும்
மனம் அறிவாகிய மனிதனும் தெய்வமே”.
.

“மனிதனுடைய அறிவானது – பிரபஞ்சத்திற்கு
ஆதி பொருளாக உள்ள தெய்வநிலையே”.
.

“அறிவை அறிவால் அறிந்த நிலையே முக்தி.
அறிவை அறிந்தோர் அன்பின் அறமே ஞானம்”.
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!