செப்டம்பர் 03 : சினத்தை வெல்வோம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


சினத்தை வெல்வோம் :
.

“சினத்தின் மூலம் நீங்கள் பெற்று வரும் உடல் நல இழப்பை நினைவு கொள்ளுங்கள். சினம் கொள்ளும் போது உயிராற்றல் மிகுகின்றது. இரத்தம் சூடேறுகிறது. இரத்த ஓட்டத்தின் அழுத்தம் அதிகரிக்கின்றது. கண்கள் ஒளியிழக்கின்றன. இருதயம் துரிதப்படுத்தப் பெற்று அதன் துடிப்பு விரைவாகின்றது. நரம்புத் தளர்ச்சி ஏற்படுகின்றது. பொதுவாக உடலியக்க ஒழுங்கே சீர் குலைந்து போகின்றது. சினத்தோடு நீங்கள் இருக்கும் போது உறவினர்கள், நண்பர்கள் கூட உங்களை நெருங்க அஞ்சுகின்றனர். உங்கள் சினமானது மற்றவர்களுக்கும் சினத்தை அல்லது வருத்தத்தைத் தூண்டுகிறது. இவற்றையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வாருங்கள். சினம் ஒழிப்பு இன்றியமையாதது என முடிவு கிடைக்கும்.
.


தொடர்ந்து நினைவைச் செயல்படுத்துங்கள். இனி இந்த நபரோடு தொடர்பு கொள்ளும் போது சினம் கொள்ளமாட்டேன், மறதியின்றி விழிப்போடு இருப்பேன் “எந்த நிலையிலும் சினம் கொள்ளாமல் இருக்க அறிவைப் பாதுகாத்துக் கொள்வேன்” என்று நீங்களே மனதிற்குள் கூறிக் கொள்ளுங்கள். ஒருவாரம் காலை, மாலை, உட்கார்ந்து சினம் ஒழிப்பு உறுதி மொழிகளை உருப்போடுங்கள். நினைவு மறவாமல் குறிப்பிட்ட நபரோடு பேசுங்கள், பழகுங்கள் இம்முறையை ஒருவார காலம் நோன்பாகக் கொள்ளுங்கள். நிச்சயம் வெற்றி கண்டுவிட்டால் பிறகு எல்லாரிடத்திலும் சினம் கொள்ளாத வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * *
.

“சினம் கவலை எனுமிரண்டும் மனிதர் வாழ்வைச்
சீரழிக்கும் நச்சாகும் உணர்ந்துகொள்வீர்
மன வலிவும் உடல் வலிவும் முயற்சி மற்றும்
மதிநுட்பம் ஆராய்ச்சி குலைந்துபோகும்;
தினம் சிறிது நேரமிதற் கென்றொதுக்கிச்
சிந்தித்துச் சீர்திருத்த, இவ்விரண்டு
இனமும் இனி என்னிடத்தே எழாமல் காப்பேன்
என்று பல முறை கூறு வெற்றிகிட்டும்”.

.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!