ஏப்ரல் 30 : நமது சொத்துக்கள்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

நமது சொத்துக்கள் :

“புதிதாக பயிற்சி ஏற்ற அன்பர்கள் தவத்தின் போது நினைவு ஓடுகிறது எண்ணங்கள் பல எழுகின்றன, இதைத் தடுக்க என்ன செய்ய வேண்டுமெனக் கேட்கிறார்கள். மனித உயிரைத் தொடர்ந்து பல தலைமுறைகளுக்கும் வரக்கூடிய சொத்து வினைப்பதிவுகள் மாத்திரமே தான். இது வரையில் பல பிறவித் தொடராகச் சேர்ந்தும், இப்பிறவியிலும் கூட்டப்பட்டதும் ஆகிய நமது வினைப்பதிவுகள் அனைத்தும் உடலில் நோயாகவும் மனதில் களங்கங்களாகவும் உள்ளன.

எனவே, எழும் எண்ணங்கள் அனைத்தும் நாம் சேர்த்துவைத்த நமது சொத்துக்களே. அவை எங்கு போகும்? நாம் வேறு வகையில் மனதை, உடலை, வாழ்வில் பழக்கி, புதிய பதிவுகளை ஏற்படுத்தி பழைய பதிவுகளின் வேகத்தைக் குறைக்க வேண்டும். தவம் செய்து உயிரின் அசைவையே கவனிப்பது ஒரு புதிய திருப்பம். சிறிது காலம் பயின்ற பின் தான் மனம் நாம் விரும்பும்வாறு ஒரே எண்ணத்தில் நிலைபெறும். அதுவரையில் விடா முயற்சியோடு பழகி பழைய பதிவுகளுக்கு மேல் பதிவுகளைக் கொடுக்க வேண்டும்.

நாம் சமையலறையில் அலமாரியில் சமையளுக்கேற்ற ஐம்பது பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறோம் என்று உதாரணத்துக்காக வைத்துக் கொள்ளுங்கள். மிளகு வேண்டுமென்று எடுக்கப் பார்க்கிறோம். அந்த வேலையில் கடுகு, பூண்டு, சீரகம் இன்னும் மற்ற சாமான்களும் கண்களுக்குத் தென்படுகின்றன. நான் மிளகு தானே தேடுகிறேன். இவையெல்லாம் ஏன் தென்பட வேண்டும் என்று சலித்துக் கொள்ள முடியுமா? எல்லாமே நாம் வைத்தவைதாம். தேவையான போது அவையும் உதவும். இப்போது மிளகை மாத்திரம் தேடி எடுத்துக் கொள்வோம் என்று மிளகை எடுத்துக் கொள்வது தான் சரியான வழி.

இதே போன்றே நமது சொத்துக்களாம் வினைப்பதிவுகள் அனைத்தும் எண்ண அலைகளாக எழுச்சி பெற்றுக் கொண்டே தான் இருக்கும். வேண்டும் போது அவையும் பயன்படும். இப்போது குண்டலினி சக்தியின் மீது மனம் வைத்து தவம் செய்வோம் என்று விழிப்பு நிலைக்கு மனத்தைக் கொண்டுவந்து தவத்தை தொடர்ந்து ஆற்றவேண்டியது தான்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

“அகத்தவத்தால் ஐம்புலனை அடக்கி அறிவறிந்திடலாம்;

அகத்தவத்தால் ஆறுகுண ஆளுமைப் பேறடைந்திடலாம்;

அகத்தவத்தால் இல்லறத்தை ‘அன்பகமாய்’ ஆற்றிடலாம்;

அகத்தவத்தால் அனைத்துயிர்கள் அருநட்பைப் பெற்றிடலாம்”.

பேரின்பமும் அறிவின் உயர்வும் :

“சூடளக்கும் கருவியிலே ரசத்தைப் போல,

சோதிவிந்து சூடேறி நெற்றி முட்ட,

நாடளக்கும் அறிவிற்கோர் புதுமை தோன்றும்;

நாடிநிற்கும் தன் மூலஸ்தானம் பட்ட

பாடளக்கும், பயனடைந்த பக்குவத்தால்,

பண்டைநிலை உற்றுணர்ந்து பேரானந்த

வீடளந்து, முடிவுகண்ட அனுபவத்தால்


விருப்புவெறுப்புணர்ந்த பெருவாழ்வாய் நிற்கும்.

எண்ணம் சீர்பட தற்சோதனை:

“அறிவு தன் தேவை பழக்கம், சந்தர்ப்பம்

அமைவதற்கு ஏற்ப ஆறுகுணங்களாகி

அறிவு உடலால் உணர்ச்சி வயப்பட்டாற்றும்

அச்செயல்களின் விளைவே உலகிலுள்ள

அறியாதோர், அறிவுடையோர் அடையும் துன்பம்;

ஆறு குணங்கள் தோற்றம் இயல்பறிந்து மாற்ற

அறிவிற்கு அகநோக்குப் பயிற்சி தேவை

அவ்வுயர்ந்த பயிற்சி பெற்று அமைதி கொள்வீர்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  மே 01 : ஆக்கத்துறை

PREV      :   ஏப்ரல் 29 : அறிவாட்சித் தரம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!