ஏப்ரல் 29 : அறிவாட்சித் தரம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

அறிவாட்சித் தரம் :

“மனித இன வாழ்வில் விஞ்ஞானம் வளர்ந்திருக்கின்றது. விரைவான போக்குவரத்துச் சாதனங்களும், விரைவாக செய்திகள் பரவும் வசதிகளும் பெருகியுள்ளன. உலகில் எந்த மூலையில் எந்த இடத்தில் ஒரு மனிதனால் ஒரு பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும் அது உலகில் எந்த மூலையில் வாழும் மக்களுக்கும் விரைவாகப் பரவும் வசதி பெருகியுள்ளது.

பொருளாதாரம், அரசியல், மதம் என்ற மூன்று துறைகளாலும் மனித இன வாழ்க்கையும் பண்பாடும் ஒன்றிணைக்கப்பட்டும் பாதுகாக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் வருகின்றன. இந்தச் சூழ்நிலைகளை மனதில் கொண்டு சிந்தித்துப் பார்த்தால், மனித இனத்திற்குப் பறித்துண்டு வாழும் முறை பொருந்தாது என்பதை உணரலாம். தேவையும் இல்லை. பழக்கப் பதிவுகளாலும், சிந்தித்துத் தெளிவு பெற்று திருந்தி வாழ முடியாத தேக்கமுற்ற மனநிலையாலும், தேவையே இல்லாத துன்பமே விளைக்கும் தீய செயல்கள் மனித வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலைமை மாற வேண்டுமெனில், உலக அறிஞர்கள் பலர் கூடிச் சிந்தித்து திட்டமிட்டு கூட்டாகச் செயல்புரிய வேண்டியுள்ளது. உண்மையை விளங்கிக் கொள்ளவும், பழக்கப் பதிவுகளை மாற்றி பறித்துண்ணும் வாழ்விலிருந்து திருத்தம் பெறவும் உதவக்கூடிய ஆன்மீகக் கல்வி உலகமெங்கும் பரவ வேண்டும். முதலில் அரசியல்வாதிகளும், மதத் தலைவர்களும், பொருள் துறைத் தலைவர்களும், கல்வித் துறைகளின் தலைவர்களும் பிரம்ம ஞானம் எனும் உயர் அறிவு பெற வேண்டும். ஏனெனில் இத்தகைய தலைவர்களுடைய வாழ்க்கை வழியையே துணைகொண்டும், அடிபற்றியும் மக்கள் வாழ்வு நடைபெற்று வருகிறது.

பிரம்ம ஞானம் எனும் அறிவின் பேரொளிதான் மனிதனை முதலில் விலங்கினச் செயல் பதிவுகளிலிருந்து விடுவிக்கும். மேலும் புலன் கவர்ச்சிகளில் மயக்கமும் பரித்துண்ணல் என்ற தீயவினைப் பதிவுகளும் எந்த அளவில் குறைகின்றனவோ, அந்த அளவுக்கு பிரம்ம ஞானம் தானாக ஒளிவிடத் தொடங்கும். படிப்படியாக, பிரம்மமே தானாக இருக்கும் அறிவாட்சித்திறம் உண்டாகும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

அறிஞர்:

“அறிவின் இருப்பிடம், இயல்பு, இயக்கம்,

அறிந்து, ஒழுகுவோர் அறிஞர்கள் ஆவர்”.

அறிஞர்களின் நிர்வாகம்:

“ஒழுக்கம் அறம் தவம் மூன்றும் உலகோர் வாழ்வில்

ஓங்க; அறிவும் செயலும் தூய்மைகொள்ளும்

பழக்கம் இயல்பாய் அமைய; கல்வி, செல்வம்,

பண்புடையோர் நிர்வாகம் பரவவேண்டும்”.

நற்பழக்கம்:

“பழக்கத்திற்கும் கூர்ந்த விளக்கத்திற்கும் இடையே

பாருலகில் மனிதரெல்லாம் போராடுகின்றார்;

பழக்கத்தை வளர்ந்த மக்கள் மாற்றுவது கடினம்,


பாலர்களின் நற்பழக்கம் பலன் விளைக்கும் எளிது”.

அமைதியின்மை எதனால்?

“அறிவறிந்தோர் அகத்ததை மெய்ப்பொருளாய்க் காண்பார்

அறியாதோர் உடலளவில் எல்லையானார்

அறிவறிந்தோர் ஆறுகுணங்கள் நிறைவமைதி,

அன்பு, கற்போடு, ஞானம், மன்னிப்பாச்சு;

அறிவறியார் அறுகுணத்தால் பகை, பிணக்கு,

அச்சம், போர் இவையாகித் துன்பம் ஏற்பார்

அறிவறிந்த அறியாத ஏற்றத் தாழ்வே

அமைதியின்மை விளைத்துளது மனிதர் வாழ்வில்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 30 : நமது சொத்துக்கள்

PREV      :   ஏப்ரல் 28 : வேதாந்தம் ​- சித்தாந்தம்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!