ஏப்ரல் 16 : வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


வாழ்க வளமுடன் :

“மிகவும் நுண்ணிய இயக்கத்திற்கு மனம் வந்தாலன்றி வாழ்த்தவே முடியாது. அந்த அளவு நுண்ணிய இயக்கத்திற்கு மாறும்போது ஒரு வலுவு ஒரு தெளிவு அந்த அமைதி நிலை, அதை ஒட்டி நம்முடைய வியாபகம் விரிந்து பலரோடு ஊடுருவி நிறைந்து அந்த உயிர்க்கலப்பு ஏற்படக்கூடிய நிலை இவை எல்லாம் அதிகமாகும்.

அந்த நுண்ணிய நிலையிலே நாம் வாழ்த்துக் கூறும்போது அவர்களுக்கும் நமக்கும் தெரியாமலேயே இரண்டுபேருடைய அடித்தளமான அந்த உயிர்நிலையில் ஒரு பரஸ்பர ஓட்டம் (interaction) ஏற்படுகின்றது. ஊடுருவிப் பாய்ந்து நிற்கின்றோம். இரண்டு தடவை நாலு தடவை செய்யச் செய்ய நமக்கும் அவர்களுக்கும் ஒரு தொடர் இயக்கம் வந்து விட்டதானால், அது எப்பொழுதும் நமக்கு அலை வீசிக்கொண்டிருக்கும், அந்த அலை நாம் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் முன்பே ஏற்படுத்திவிட்ட தொடர்புப்படி வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும். அந்த தொடர் அறுபடாது இருக்கும்.

அதனால் அவருக்கு வேண்டியதை நாம் செய்ய வேண்டும் என்று நினைப்பது நமக்கு வேண்டியதை அவர்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பது, அவர்கள் நன்மைக்காக நாம் எண்ணுவது இவை எல்லாம் சாதாரண நிகழ்ச்சியாக மாறிவிடும். அப்படி வாழ்த்தி வாழ்த்தி எப்பேர்பட்டவர்களையும் கூட நண்பர்களாக மாற்றிவிட முடியும். அவர்களுடைய செயல்களைத் திருத்திவிட முடியும். எண்ணங்களை எல்லாம் ஒழுங்குபடுத்தி விட முடியும். நல்லவர்களாக மாற்றிவிட முடியும்.

தவம் முடித்த பிறகு வாழ்த்துகிறோம். தவத்தில் இருக்கும்போதே நாம் சாதாரணமாக நுண்ணிய நிலையில் Alpha Wave க்கு வந்து விடுகிறோம். அந்த நிலையில் நுண்ணிய செல்கள் (Subtle cells) எல்லாம் மூளையில் இயக்கத்திற்கு வந்துவிடும். அந்த இடத்தோடு அங்கேயிருந்து அந்த அலையை நாம் வீசுகிறோம். “வாழ்க வளமுடன்” என்ற அந்த எண்ணத்திற்கு வலுவு அதிகம். உதாரணமாக ஒரு வில் இருக்கிறது அம்பு இருக்கிறது. அம்பு எய்வதற்கு ஓரளவு நாணைப் பின்னுக்கு இழுத்துவிடுவது ஒன்று, கடைசிவரைக்கும் இழுத்து அம்பு விடுவது என்பது ஒன்று.

எவ்வளவு தூரம் நாணை இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு அம்புக்கு வேகம்; அதே போன்று நாம் எவ்வளவு அமைதிக்கு அறிவை, மனதைக் கொண்டு வருகிறோமோ அங்கேயிருந்து கொடுக்கக்கூடிய வாழ்த்துக்கு கூட வேகம் அதிகம், செயல்படும் வேகம் அதிகம். ஆகவே நாம் தவம் செய்யும் போது இன்னும் நுண்ணிய நிலையில் இருந்து அந்த நேரத்தில் நாம் சொல்லக்கூடிய சொல்லுக்கு, எண்ணக் கூடிய எண்ணத்திற்கு வலுவு அதிகம். சீக்கிரமாகச் செயலுக்கும் வந்துவிடும். நமக்காக என்னென்ன வேண்டுமோ அதைச் செயல்படுத்துவதற்குச் சில நாட்களானாலும் சரி, பிறருக்காக நாம் வேண்டுதல் வெகு சீக்கிரமாக அதக பயன் விளைவிக்கும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும் போது பிறர்

உள்ளத்திலே நமது கருத்து நலதொரு இனிய

நட்புறவை வளர்க்கிறது”.

“வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய நிலைக்கு

அமைதி நிலைக்கு வருகிறது. அதனால் மனதிற்கு


வலுவும் தெளிவும் ஏற்படுகிறது”.

“வாழ்த்து வீண் ஆகாது. “வாழ்க வளமுடன்”-

“வாழ்க வளமுடன்” என்று சொல்லச் சொல்ல

உடல், மனம் நன்றாக இருக்கும்”.

“வாழ்த்து எல்லா மந்திரங்களுக்கும் மேலான

திருமந்திரமாகும்”.

வாழ்த்து:

வாழ்க வாழ்கவென் வாழ்க்கைத் துணைவர்

வாழ்க வாழ்கவென் குழந்தைகள் எல்லாம்

வாழ்க வாழ்க என்னுடன் பிறந்தோர்கள்

வாழ்க வாழ்கவென் நண்பர்கள் அனைவரும்

வாழ்க வாழ்கவென் தொழில்துறை அனபர்கள்

வாழ்க பகைவர்கள் வளமொடு திருந்தி

வாழ்க இவ்வுலகில் வாழ் மக்களெல்லாம்

வாழ்க வாழ்க இவ்வையகம் வாழ்க

வாழ்க அறநெறி வாழ்க மெய்ஞானம்!

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      : ஏப்ரல் 17 : உவமையின் எல்லை

PREV      :  ஏப்ரல் 15 : அறிவே சிவம், சிவமே அறிவு

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!