ஏப்ரல் 07 : சீர்திருத்தமே வாழ்வின் வளம்

 வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


 

சீர்திருத்தமே வாழ்வின் வளம் :

“மனித இன வாழ்வு, முன்னேற்றம் சீர்திருத்தம் என்ற இருவகையாலும் வளம் பெறுகின்றது. தேவையுணர்வு தொழில்திறமை இன்ப துன்ப அனுபோக அனுபவங்கள், சிந்தனை, அறிவின் தெளிவு இவைகளுக்கேற்ப மனிதர் வாழ்வு அறிவியல், சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் என்ற ஐந்து துறைகளிலே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகின்றது. முன்னேற்றம் வேகம் கொள்ளுகிறது.

முனேற்றத்தின் வளர்ச்சிக்கேற்ப சீர்திருத்தம் உயர்ந்தாலன்றி அது போதிய அளவில் நல் விளைவுகளைத் தராது. சீர்திருத்தத்தின் வளர்ச்சி குறைந்திருக்கும் அளவிற்கேற்ப முன்னேற்றத்தாலேயே தீய விளைவுகளும் உண்டாகிவிடும்.

வேகம் என்பதை முன்னேற்றமாகக் கொண்டால் அதை நிர்வகிக்கும் நுட்பம் திறமை இரண்டையும் சேர்த்து சீர்திருத்தமாகக் கொள்ளலாம். எளிதாகவும் வேகமாகவும் வாழ்க்கைத் தேவைப் பொருட்களை பெருக்கிக் கொள்ளும் சக்தி உயருகின்றதென்றால் அதுவே முன்னேற்றமாகும். பெருகும் பொருட்களைச் சேமித்து நிர்வகித்து தனி மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் அப்போதும் பிற்காலத்திலும் தீமை பயக்காத வகையில் அளவுடன் அனுபவிக்கும் முறையே சீர்திருத்தமாகும்.

இத்தகைய சீர்திருத்தமே ஒழுக்கம் என்றும் பேசப்படுகின்றது. கற்பனை, சிந்தனை, உடல் கருவிகளுக்கு உபகருவிகளை உபயோகிக்கும் திறன், இவைகளினால் ஒருவர் பலர் வாழ்விற்கு நன்மையோ தீமையோ விளைவிக்கும் ஆற்றலைப் பெற்று முன்னேற்றத்தில் விருப்பங் கொண்டுள்ள மனித இன வாழ்வில் எப்போதுமே சீர்திருத்தம் தேவையாகவே இருக்கின்றது.

சீர்திருத்தம் என்பது உயர்ந்த அறிவின் நிலையையே உணரப்படுகின்றது. அது மதம், அரசியல் என்ற இரு வகையில் போதனைகளாகவும் சட்டங்களாகவும் சமுதாய வாழ்வில் பயன்படுகிறது.

இத்தகைய இலக்கணத்திற்கு முரணாக ஏதேனும் ஒரு விதிமுறை ஒரு மதத்திலேனும், அரசியல் நிர்வாகத்திலேனும் இருக்குமேயானால், அது மனித இனம் அறிவியல் துறையில் வளர்ச்சி பெறாத காலத்தில் சந்தர்ப்ப தேவையாகக் கொண்டு பழக்கத்தில் தொடர்ந்து வரும் ஒன்றாகவும், அதை அக்காலம் வரை சீர்திருத்தம் மக்களிடம் பக்குவம் இல்லாமலும் இருந்திருக்க வேண்டும். அவை இவ்விலக்கணத்தின் கீழ் அக்காலத் தேவைக்கேற்ப தோற்றுவிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது மயக்கவாதிகளாலோ, கயவர்களாலோ சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தேவையுள்ள போது சீர்திருத்தமாகக் கொள்ளப்பட்டது ஒரு முறை. அது தேவையற்ற போது சீர்கேடாகவும் மாறிவிடக் கூடும்.

இயற்கையமைப்பு, எண்ணத்தின் ஆற்றல், பொருட்களின் தரம், அவைகளை அனுபவிக்கும் முறைகள், இன்ப துன்ப இயல்பு என்ற ஐவகையும் அறிந்து, நெறிதவறாது ஒழுக்கமுடன் தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைக்கும் ஆற்றலும் கருணையும் உடையோன் சீர்திருத்தவாதி என்ற உயர்ந்த சொல்லுக்கு தகுதியயுடையவனாகிறான்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * *

 

 

சீர்திருத்தத்திற்கு முறை:

சீர்திருத்தம் எனில் அது நம் நல்வாழ்விற்குச்


சிறந்த தெனப் பலர் உணர்ந்து ஏற்க வேண்டும்

சீர்திருத்தம் படிப்படியாய் மக்கள் வாழ்வில்

சிறிது சிறிதாய்ச் செயலில் மலர வேண்டும் ;

சீர்திருத்த விளக்கமது மக்கள் வாழ்வைச்

சிதைக்காமல் முன்னேற்றம் அளிக்க வேண்டும்

சீர்திருத்தம் புகுத்துதற்கே இத்தகைய

சீர்திருத்த முறையைப் பின் பற்ற வேண்டும்.

“அனைத்தையும் கற்பதற்கும், கற்றபடி வாழ்ந்து

பயன் பெறுவதற்கும் மனிதனிடம் போதிய

அறிவு அமைந்துள்ளது”.

“நாள்தோறும் செய்தவற்றின் பயனை நீங்கள்

நல்லுறக்கம் கொள்வதற்கு முன் கவனித்துச்

சீர்திருத்திக் கொள்வீர்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

NEXT      :  ஏப்ரல் 08 : அலை இயக்கம்

PREV      :  ஏப்ரல் 06 : எண்ண அலைகள்

நாளொரு நற்சிந்தனை:Like it? Please Spread the word!