வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
சிந்தனைத் திறன் வளர :
“சிந்தனைத் திறனை வளர்க்க மூன்று இணைப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
1) திட்டமிட்டுச் செயல்புரிதல் (Planned Work)
2) விழிப்பு நிலை (Awareness)
3) தற்சோதனை (Introspection) முறை.
இவற்றில் விளைவைக் கணித்து அதற்கு ஏற்ற அளவிலும் முறையிலும் மனம் மொழி செயல்களைப் பயன்படுத்தலே ‘திட்டமிட்டுச் செயல்புரிவதாகும்’.
தேவை, பழக்கம், சூழ்நிலைகள் இவற்றால் உணர்ச்சிவயப்படாது தன்னையும், தான் அடைய வேண்டிய பயனையும் மறவாத விழிப்பு நிலையிலே செயலாற்றும் திறன்தான் ‘விழிப்பு நிலை’ யாகும்.
ஒவ்வொரு செயல் முடிவிலும் விளைவைக் கணித்து, தான் செய்த முறை, அதில் விளைந்த தவறுகள் அல்லது நன்மைகள் இவற்றைச் சிந்தித்து உணர்வது; ஒவ்வொரு நாளும், இரவு படுக்கு முன், அன்று தான் செய்த செயல்கள் அனைத்தையும் நினைவிற்குக் கொண்டு வந்து, தன் செயல்களைச் சோதிப்பது; செயலில் தவறு கண்டால் இனி அத் தவறு ஏற்படாத உறுதி கொள்வது; நலமாக இருந்தால் அந்த முறையை அழுத்தமாக மனதில் பதிவு கொள்வது; இவை அனைத்தும் இணைந்த முறையே அகத்தாய்வுச் செயலாகும்.”
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
* * * * * * * * * * * * * * * * * * * * * *
பண்பு :
“சிந்தனையுடன் செயலும்,
செயலுடன் சிந்தனையும்,
பந்தித்து நிற்கப் பழகுதல் நற்பண்பு”.
நலம் தீது சீர்தூக்கி வினையாற்ற :
“சிந்தித்து நலம்காத்துச் செயலாற்றும்
பண்புடையோர் சிலர்க்கும் தங்கள்
செயல் விளைவாய் சிலர் இன்பம் சிலர் துன்பம்
தவிர்க்க முடியாதபடி பெறுதல் காண்போம்.
இந்த ஒரு நிலை வந்தால் இதைச் செய்தால்
செய்யாக்கால் எங்கு நலம் மிகும் என்று
எண்ணிச் சோதித்த பின்னர் ஏற்பதா இச்செயலை
விடுவதா எனும் முடிவை எடுக்க வேண்டும்.
எந்த ஒரு வகைத் துன்பம் எத்தரப்பில்
வந்தாலும் இன்பம் காண்போர்
ஈடாகத் துன்புறுவோர்க் காறுதலாய்
ஈதல் எனும் ஏற்றபண்பைப்
பந்தமின்றிச் சீர்தூக்கிப் பலன் மிகுதி
கண்டாற்றல் மனித நீதி
பண்பாடே ஏற்றதாம் பகுத்துணர்ந்து
செயல்படுத்தி நலமாய் வாழ்வோம்”.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
NEXT : ஏப்ரல் 02 : கவலை இல்லை
PREV : மார்ச் 31 : விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம்