ஆகஸ்ட் 31 : வாழ்க்கை வள விஞ்ஞானம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்


வாழ்க்கை வள விஞ்ஞானம் :

“தெய்வீக இயக்கமான மனமும், அதன் அனுபவங்களையெல்லாம் பதிந்து இருப்பாக வைத்திருக்கும் கருமையமும் இக்கால மக்களிடையே பெரும் அளவில் தரம் குறைந்து களங்கமுற்றிருக்கின்றன. துன்பங்களை அளிக்கவல்ல எண்ணங்கள், செயல்கள் ஆகிய இருவகை வினைப்பதிவுகளின் விளைவாக, மனிதனுடைய அறிவாட்சித்தரம் களங்கப்பட்டிருப்பதால் தான் மக்கள் வாழ்வில் துன்பங்களும் சிக்கல்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன. கருமையத்தின் களங்கத்தைப் போக்க மன இயக்கத்தைத் தான் சீர் செய்ய வேண்டும்.

செயல்களில் ஒழுக்கத்தை நடைமுறைப் படுத்தினால் தான் மன இயக்கம் ஒழுங்குறும். இதன் மூலம் தான் மனிதன் மனத்தாலும், குணத்தாலும் சீர்மை பெற்று இயற்கை வழிநின்று அறவாழ்வு பின்பற்றி அமைதியோடும் மகிழ்ச்சியோடும் வாழ முடியும். இத்தகைய மனவளம் பெற நிச்சயமான செயல் வழி வாழ்க்கை வள விஞ்ஞானம் தான் “மனவளக்கலை”. மரபுவழியாக பேற்றோர்கள மூலம் தொடரும் தீய வினைப் பதிவுகளையும், இப்பிறவியில் அவரவரே செயலாற்றிப் பெற்ற பதிவுகளையும் தூய்மை செய்ய வேண்டுமானால் பிரம்ம ஞானம் பெற்ற ஒரு குருவின் மூலம் தான் அது அனுபவ சாத்தியமாகும். ஆதலால் மனவளக்கலைப் பயிற்சியானது இறைநிலையுணர்ந்த ஒரு குருவின் மூலம் அளிக்கப்படுகிறது.”


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

(காலம் வீணாக்க வேண்டாம்…)

சிலை வணக்கத்தின் எல்லை :

“இறைநிலையே அறிவாக இருக்கும் போது

இவ்வறிவை சிலை வடிவத் தெல்லை கட்டி

குறை போக்கப் பொருள், புகழ், செல்வாக்குவேண்டி

கும்பிட்டுப் பலன் கண்ட வரையில் போதும்;

நிறை நிலைக்கு அறிவு விரிந்துண்மை காண

நேர் வழியாம் அகத்தவத்தைக் குருவால் பெற்று

முறையாகப் பயின்றுன்னில் இறையைத் தேற

முனைந்திடுவீர் காலம் வீணாக்க வேண்டாம்.

அன்பின் அழைப்பு:

“பஞ்சமகா பாதகங்கள் செய்தோரேனும்

பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி

சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு

சன்மார்க்க நிலைகாணத் துடித்து நின்றால் –

அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்;

அறிவு நிலையறிவிப்போம், அமைதி காண்பீர்,

துஞ்சாமலும் கூட நாடுவோர்க்குத்

துணைபுரிதல் எம் கடமை யாகக்கொண்டோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!