ஆகஸ்ட் 23 : பாவமும், புண்ணியமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
.


பாவமும், புண்ணியமும் :
.

“நன்மையும் தீமையும் செயல்களில் இல்லை. செய்யும் செயல் என்னென்ன விளைவுகளைத் தருமோ அந்த விளைவைக் கொண்டு தான் நன்மையும் தீமையுமாக பிரித்துப் பார்க்கிறோம். அது நன்மையான விளைவாக இருந்தால் புண்ணியம் என்றும், தீமையான விளைவாக இருந்தால் பாவம் என்றும் கூறுகிறோம். பசி எடுக்கிறது. உணவு சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்கிறோம். ஆனால் நாவுக்குச் சுவையாகவும், நன்றாகவும் இருக்கிறது என்பதற்காக அதிகப்படியாக உண்டால் என்ன ஆகும்? இந்த உண்ட உணவே தீமையை உண்டாக்குகிறது. அதாவது அளவு முறை மாறும் போது இன்பமே துன்பமாக மாறுகிறது. ஆகவே செயலில் பாவம் புண்ணியம் இல்லை. செயல்களின் விளைவைத்தான் கவனிக்க வேண்டும். இதற்கு ஒரு சாம்யம் (Formula) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பாவம் எது? புண்ணியம் எது? என்று சிந்திக்க வேண்டும்.
.

புண்ணியம் எது?

எண்ணம், சொல், செயல் ஆகிய ஏதொன்றாலும் தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, அறிவிற்கோ, உடலுக்கோ துன்பம் தராது, விழிப்போடு, துன்பங்கள் நீக்கும் வகையில் செய்யப்படும் செயல்கள் யாவும் புண்ணியத்தின் பாற்படும்.
.


பாவம் எது?

ஒருவரது எண்ணம், சொல், செயல் இவைகளினால் எதனாலேனும் தனக்கேனும், பிறருக்கேனும் அன்றைக்கோ, பிற்காலத்திலோ, உடலுணர்ச்சிக்கோ, பகுத்தறிவுக்கோ துன்பம் விளைவதாக இருந்தால் அத்தகைய செயல்கள் பாவம் என்பதாகும்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.
* * * * * * * * * * * * * * *
.
உதவி :

“இவ்வுலகில் எவர்க்கெனினும் துன்பம் உண்டுபண்ண
எந்த அளவோ ஒருவர் உயிர்நலம் பறிக்க
எவ்வகையிலும் ஒருவர்க்குரிமையில்லை இல்லை.
இயற்கையின் சட்டமிது, காப்புமிது வாகும்.
செவ்வியஉன் அறிவாலே, செயல்திறமையாலே
செய்வது பிறர்க்குதவி சிறந்த வாழ்வு ஆகும்.
ஒவ்வும்வகை யுற்றுணர்ந்து உயிர்க்கினிமை செய்ய,
உயிரனைத்தும் வாழ்த்தும் உனை; நீ யுலகை வாழ்த்து.”
.

சுவர்க்கம் – நரகம் :

“உருவம் வரைக்கும் குறுகிநின்ற
உணர்ச்சி நிலையே நர-அகமாம்.
அருவ மென்னும் பேரண்டம்
அறிந்த நிலையே சுவர்-அகமாம்; பெருமையுள
விண் என்ற அணுவறிந்தோன்
விண்ணவனாம். ஆராய்ந்து
விண்கடந்து, வான் அறிந்த
விவேகியே வானவனாம்.”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Like it? Please Spread the word!