ஆகஸ்ட் 22 : இறைநிலையின் இன்ப ஊற்று

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இறைநிலையின் இன்ப ஊற்று :

“உணவிலிருந்து கிடைத்து எல்லா தாதுக்களிலும் கலந்து ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நுண் துகள்களைத் தூல உடலானது தனது வித்தின் மூலம் பிரித்தெடுத்து உடலில் ஏற்கனவே ஓடிக் கொண்டிருக்கக் கூடிய உயிர்ச் சக்தியினோடு சேர்த்து விடுகிறது. முழு உடலில் நிறைந்தும், வித்துவில் செறிந்தும் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய நுண் விண் கூட்டமே உயிர்ச் சக்தியென மதிக்கப்படுகிறது. உயிர்ச்சக்தி என்ற சிறப்பைப் பெற்று விளங்கும் நுண் விண் துகள்களே தங்களது சுழற்சி விரைவைக் கொண்டு சீவகாந்தத்தை விளைவித்துக் கொண்டே இருப்பதால், இந்தச் சீவகாந்தமானது பரு உடலிலும், நுண்ணுடலிலும் விளைந்து, நிறைந்து, சுழன்றோடிக் கொண்டிருக்கிறது. அந்தச் சீவகாந்தமே மனமெனும் சிறப்பையும் பெறுகிறது.

உடலாலோ உள்ளத்தாலோ ஆற்றப்படக் கூடிய எந்தச் செயலானாலும் அதனைச் சீவகாந்தம் ஏற்றுக் கொள்வதுடன், அப்பதிவுகளைத் தனது இயக்க மையமான கருமையத்தில் இறுக்கிச் சுருக்கி வைத்துவிடுகிறது. அங்கிருந்தவாறு காலாகாலத்தில் தக்க விளைவுகள் இன்பமாகவோ துன்பமாகவோ வெளி வருகின்றன.


இந்நிலைகளை இறையாற்றலே – தனது நியதிகளில் ஒன்றாக – ஏற்படுத்தி வைத்துள்ளதால் செயல் – விளைவு, செயல் – பதிவு – விளைவு என்ற தத்துவத்தை யார் தடுக்க முடியும்?

இந்தத் தெய்வீக ஒழுங்கமைப்பை உணராமலோ, உணர்ந்தும் அலட்சியம் செய்தோ, அல்லது, உணர்ச்சி வயப்பட்டோ துன்பம் விளையக் கூடிய – இறைநிலையின் இன்ப ஊற்றுத் தன்மைக்கு எதிரான – செயலைச் செய்துவிட்டால், பிறகு இறைவனுக்கு வேண்டுதல்கள் செய்தாலுங்கூட, விளைவிலிருந்து தப்ப முடியாது.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * *

இறையுணர்வில் எழும் பேரின்பம்:

“இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே

ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன்

நன்மை தரும் நவ கோள்கள் நட்சத்திரக் கூட்டம்

நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்

உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்

உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்

தன்மயமாய்த் தான் அதுவாய்த் தவறிடாதியக்கும் உன்

தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே”.

“அறிவை ஏடுகளில் பெறலாம்,

ஞானத்தை தவத்தால் பெறலாம்”.

“அறிவு என்பது அறியப்படுவது,

ஞானம் என்பது உணரப்படுவது”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!