ஆகஸ்ட் 19 : பழிச்செயல் பதிவு நீக்கம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
.


பழிச்செயல் பதிவு நீக்கம் :
.

1) தனக்கோ, பிறர்க்கோ துன்பம் தரும் செயல் யாவும் பழிச் செயலாகும்.
.

2) மனம், மொழி, செயல் எதுவாயினும் ஒவ்வொன்றுக்கும் உயிரிலும் பதிவுகள் உண்டு.
.

3) வினைகளின் தன்மைகளுக்கும், விளைவுகளுக்கும் ஏற்ப அவை ஆகாமியம், பிராரப்தம், சஞ்சிதம் என்னும் மூன்றுவித பழிச் செயல் பதிவுகளாக – 1) உறுப்புப் புலன்களிலும், 2) மூளையிலும், 3)வித்திலும் பதிவாகின்றன. இவையனைத்தும் ஆன்மாவின் சூக்குமப் பதிவுகளாகிப் பிறவித் தொடராக மனிதனுக்குத் துன்பங்களை அளிக்கின்றன.
.

4) விழிப்பு நிலை பெறவும், மனவலிவு பெறவும் ஏற்ற உளப் பயிற்சி ஏற்று எல்லாப் பழிச் செயல்களையும் பிராயச்சித்தம், உணர்ந்து திருந்தி அழித்தல், தெய்வ நிலைத் தெளிவால் முறித்தல் என்ற மூவகையில் போக்கி வினைத் தூய்மையும், மனத் தூய்மையும் பெறலாம்.
.

5) எந்த பழிச் செயலானாலும் மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாதிருக்கும் வழியில் முடிவு கண்ட பின்னர் தான், மனவலிவு பெற்ற பின்னர் தான் அதை முயற்சியால் பயிற்சியால் முறையாகப் போக்கி நலம் காணலாம் என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
.


ஆகவே மனவிரிவு, விளக்கம், விழிப்புநிலை என்ற நிலைகளும், கூர்ந்துணர்தல், கிரகித்தல், ஒத்துப் போதல், பெருந்தன்மை, ஆக்கச் செயல்களில் ஈடுபாடு ஆகியவைகளை எந்த அளவுக்கு நாம் வளர்த்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்குத் தான் மகிழ்ச்சியும் நிறைவும், அமைதியும் பெறலாம்.
.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
.

* * * * * * * * * * * * * * * * *
.
அமைதி பெறுவீர் :

“அறிவு என்பதோ களங்கமற்றது
அன்பு ஒன்றே அதன் இயல்பாகும்;
அனுபவம் தேவைகள் என்னும் இரண்டால்
அதுவே குணங்களாய்க் களங்கமுற்றது,
அறிவு அகம் நோக்கித் தன்னிலை கண்டிட
அகன்று போகும் களங்கம். சுயமாகும்
அன்பு தொண்டு அறம் இயல்பாகிவிடும்
அந்த நிலைநாடி அமைதி பெறுவீரே !”
.

அகத்தவப் பேறு:

“அகத்தவத்தால் “ஆ” லயமாம் சிறந்த வழிபாடு
ஆராய்ச்சி அறிவுடையோர்க் கேற்ற உயிர்ப் பேறு
அகத்தவத்தால் தனையறிந்து பழிச்சுமைகள் போக்கி
அறநெறியில் பிறழாது ஆற்றி வாழலாகும்;
அகத்தவமோ தனையறிந்த ஞான ஆசானின்றி
அறிந்திடவோ பழகிடவோ முயல்வது கூடாது
அகத்தவத்தை மெய்விளக்க மன்றங்கள் மூலம்
அறிந்தெளிதில் பயின்றுபயன் பெற்றுய்ய வாரீர்.”
.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
Like it? Please Spread the word!