ஆகஸ்ட் 12 : அலையின் ஐவகை இயக்கம்

வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.


அலையின் ஐவகை இயக்கம் :

“எந்தப் பொருளை எடுத்தாலும், அணு முதல் அண்டங்கள் ஈறாக அது சுழன்று கொண்டேயிருப்பதனாலே அலை என்பது தோன்றிக் கொண்டேயிருக்கிறது. இந்த அலை தன்னைச் சுற்றியுள்ள பொருள்மீது தாக்குமல்லவா? அந்தத் தாக்குதல்தான் மோதுதல் (Clash) என்று சொல்லலாம்.

அப்படி மோதும்பொழுது ஒவ்வொரு பொருளிடத்தும் அதே ஆற்றல் உள்ளதால், அதிலிருந்து வரக்கூடிய அலையோடு, இந்த அலையும் மோதும்பொழுது பிரதிபலிக்கிறது (Reflection).

அதனால் அது திரும்பிவருகிறது. ஒரு பொருளிலிருந்து போன அலை முழுவதும் திரும்புவதில்லை. அங்கு மோதுதல் ஏற்படுவதால் சிதறுதல் (Refraction) உண்டாகிறது.

இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாப் பொருள்களும் அலைகளின் கூட்டு இயக்கமாகவே இருப்பதால், மற்றொரு அலை மோதும்பொழுது ஊடுறுவியும் (Penetration) போகிறது.

அதே அலை ஒரு பகுதி மோதி, திரும்பி வந்து மீண்டும் மோதியும் இரண்டு பொருட்களுக்கிடையே ஓடிக் கொண்டேயும் (Interaction) இருக்கும்.

ஆகவே எந்தப் பொருள்களிடத்தும் தோன்றக் கூடிய அலைக்கு மோதுதல், பிரதிபலித்தல், சிதறுதல், ஊடுறுவுதல், அவையிடையே முன்பின் ஓடுதல் என்ற ஐந்து வகையான இயக்கங்கள் உண்டு.

நாம் இங்கே அமர்ந்திருக்கின்றோம். எல்லோரிடத்திலும் ஒரு அலையியக்கம் இருக்கிறது. அந்த அலை மற்றவரிடத்தில் மோதும். ஓரளவு திரும்பும். ஓரளவு சிதறும். ஓரளவு ஊடுறுவிப் போகும். பிறகு இரண்டு பேர்களுக்கிடையே ஓடிக்கொண்டுமிருக்கும். இதை உணர்ந்து கொள்ள வேண்டும். பயன் கொள்ள வேண்டும்.


வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * *

 

 

“வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்

வேறு எந்தப் பொருள் வலிது பிரபஞ்சத்தில்?

தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே

தொட, தொட்டதாய் எண்ணும் அரூபம் யாது?

பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா,

பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா,

எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள

இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?.”

நன்மையே நோக்கு:

“எண்ணம், சொல், செயலால் எவருக்கும், எப்போதும்,

நன்மையே விளைவிக்க நாட்டமா யிரு”.

மனதின் அடித்தளம் இறைநிலை:

“அலை அலையாய் இயங்கும் மனத்தடித்தளமே நிலை பொருள்

அது தெய்வம் கடல் போன்று; அலை போன்றதே மனம்;

நிலை பொருளாம் இருப்பு சிவம் நித்தியம் என்றோதிடும்

நெடுவேளி உன் அறிவாகும்; உனது அலையே மனம்;

கலையுணர்வால் மெய்ப் பொருளாம் கண்காணா ஒன்றினைக்

கண் காது மூக்கு முகம் குணம் உருவம் புகுத்தியே

சிலையுருவில் காட்டி சொன்ன கதைகளில் மயங்கி நாம்

சிக்கியுள்ளவரை உண்மை நிலை விளங்காதுணருவோம்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!