ஆகஸ்ட் 07 : இன்பமும் துன்பமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இன்பமும் துன்பமும் :

“உலகில் வாழும் உயிரினங்கள் பல கோடியாகும். அவற்றுள் மனித இனம் மேலானது. தொழில்களைத் திறன்படச் செய்வதற்கான துணைக் கருவிகளையும், ஆராய்ச்சிக்கு விஞ்ஞான அறிவோடு நுண் கருவிகளையும் உபயோகிக்கத் கூடிய வகையில் உடல் உறுப்புக்கள் மனிதனிடம் அமைந்துள்ளன. மேலும் ஊறு, ஒலி, ஒளி, சுவை, மணம் ஆகிய ஐந்தையும் உணரும் ஐயுணர்வோடு, மனம், உயிர், மெய் எனும் மூன்று மறைபொருட்களை உணரத்தக்க ஆறாம் அறிவும் மனிதனிடம் அமைந்துள்ளது.

இத்தகைய சிறப்புக்களை உணரும்போது தான் ஒரு பேருண்மை தெளிவாகின்றது; இயற்கையே தன் பரிணாமத்தின் உச்ச கட்டமாக மனித வடிவில் வந்து, தனது இயல்புகளை ரசித்தும், பெருமைகளை உணர்ந்தும் நிறைவு பெறுகிறது என்ற உண்மை விளங்குகிறது.

இவ்வளவு சிறப்புக்களையும் பெற்ற மனிதனின் பிறவி நோக்கம், தனது அறிவில் முழுமை பெற்று, இயற்கையின் சிறப்பு உணர்ந்து அமைதியும் நிறைவும் பெறுவதேயாகும். மனிதனுடைய வாழ்வில் துன்பங்கள் மிகுமேயானால் பிறவியின் நோக்கமாகிய அறிவின் வளர்ச்சி தடைப்படும். அறிவானது அமைதியான வழியில் இயங்க நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையாக எழும் தேவைகள் மூன்று அவை :

பசி, வெட்பதட்ப ஏற்றத்தாழ்வு, உணர்வு: உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு.

இந்த மூன்று உணர்வுகளையும் காலத்தோடும், அளவோடும், தக்க பொருட்களையும், வசதிகளையும் கொண்டு (with appropriate facilities and commodities) நிறைவு செய்து கொண்டேயிருக்க வேண்டும். மேலே விளக்கப் பெற்ற பசி உணர்வு, வெப்பதட்ப ஏற்றத்தாழ்வு உணர்வு, உடல் கழிவுப் பொருட்களின் உந்துவேக உணர்வு இவைகளைக் காலத்தோடு நிறைவு செய்யாவிட்டால் உடலில் அமைதி குலைந்து நலம் கெட்டு துன்ப உணர்வுகளாக மாறும்.


இயற்கைத் துன்பங்களை அவ்வப்போது சமன் செய்து கொண்டே இருப்போமானால் மிகுதி இருப்பது என்ன? அமைதியும் இனிமையும் தாமே! அமைதியே அறிவு ஆராய்ச்சிக்கும், உயர்வுக்கும் ஒத்ததாகும். எனவே அமைதி காப்பது என்பதே மனிதனின் தலையாய செயல்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

 

 

மாய காந்த விளைவுகளே இன்பதுன்பம் :

“காந்த நிலை உணர்ந்திடில் கடவுள் மனம் அதனிலே

கண்டிடலாம் அதன் மாயத் திருநடனக் காட்சியாய்,

மாந்தருக்குள் ஊறு ஓசை மணம் ஒளிசுவை மனம்

மற்றும் இன்பம் துன்பம் யாவும் மாயகாந்த விளைவுகள்;

சாந்தமான மனநிலையில் சலனமின்றி ஆய்ந்திட

சந்தேகம் சிக்கலின்றிச் சாட்சி கூறும் உன் உள்ளம்,

வேந்தருக்கும் வேதருக்கும் வணிகருக்கும் பொது இது

விரிந்தறிவில் இறையுணர விளக்கினேன் விளங்கியே.

இன்பம் துன்பம்:

“இன்பம் துன்பம் என்பதென்ன? இவையிரண்டும்

எங்கிருந்து தோன்றுகின்ற தெனவாராய்ந்தேன்

இன்பமே இயற்கையிலே எதிலும் என்றும்

எங்கும் நிறைந்துள்ளது; அனுபோகத்திற்கு

இன்பத்தின் அளவுமுறை மாறும்போது

ஏற்படும் ஓர் பொருத்தமிலா உணர்ச்சியேதான்

இன்பத்தின் மருபெயராம் துன்ப மாயும்

இரண்டும் அறிவின் அலைகளாயும் கண்டேன்”.

மேடு பள்ளம்:

“தரை ஒன்றை மேடு பள்ளம் என இரண்டாய்

தரம் பிரித்துப் பேசுமாபோல் உணர்ச்சி ஒன்றை

உரைக்கின்றோம் அதன் ஏற்றத் தாழ்விவற்றிற்கு

ஒத்தபடி இன்ப மென்றும் துன்ப மென்றும்”.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!