ஆகஸ்ட் 03 : திருத்தமும் வருத்தமும்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


திருத்தமும் வருத்தமும் :

“பிறரிடம் உள்ள குறைகளுக்கு முழுக்க முழுக்க அவர்களே தான் காரணம் என்றாலும்கூட, அந்தக் குறைதான் நம் சினத்திற்கும் காரணம் என்றாலும்கூட சினத்தினால் அவர்களை இதுவரை எவ்வளவு திருத்தியிருக்கிறோம் என்று பார்த்தால் ஓர் அங்குலம் கூட இருக்காது. அல்லது ஒரு வேலை அவர்கள் நமக்குப் பயந்து கொண்டிருக்கலாம். ஆனால் திருந்தி இருக்கமாட்டார்கள்.

‘நானும் முதலில் கோபம் கொண்டதில்லை. தவறு செய்யும் போது நல்ல விதமாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அந்த முறை சரிப்பட்டு வரவில்லையே ! இனி கோபமும் கூடாதென்றால் அவர்களை எப்படித்தான் திருத்துவது?’ என்று ஒருவர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். அவருக்குச் சொல்வதெல்லாம் சினத்தினால் திருத்தம் வரவே வராது. சினத்தினால் ஏதாவது வரும் என்றால் அது வருத்தமாகத் தான் இருக்கும். மாறாக, அன்பாய் முறையோடு பலமுறை கனிவாகக் கூறினோம் என்றால் அவர்கள் திருந்தவும் வழியிருக்கிறது.


முக்கியமாக அவர்கள் மனம் புண்படும்படியாகக் கூறக்கூடாது. தவறு செய்யப்பட்ட கையேடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல் அறிவுரை இருக்கக் கூடாது. ஏன் தவறைச் சுட்டிக்காட்டுவது போலவும் கூட இருக்கக் கூடாது. “அப்படி செய்ததை இப்படிச் செய்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், இனிமேல் இந்தக் காரியத்தை இந்த விதமாகவே செய்து நன்மை அனுபவிப்போம்,” என்ற விதமாகத்தான் அறிவுரை இருக்க வேண்டும். கூடவே உங்கள் தவங்களில் அவர்கள் திருத்தத்திற்கான வாழ்த்தையும் சங்கற்பத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.”

இந்த முறையில் சிறிது கால நீடிப்பு ஏற்பட்டாலும் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பலர் ஏற்கனவே இம்முறையால் வெற்றி கண்டாயிற்று. எனவே பிறரைத் திருத்துவது எப்படி என்பது இங்கு முக்கியமில்லை. நமது திருத்தந்தான் முக்கியம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

விழிப்பு நிலை சீவன்முக்தி:

“செயல்களால் சிந்தனையும் அதன் உயர்வும்

சிந்தனையால் செயல் பலவும் ஒன்றால் ஒன்றாம்

செயல் எண்ணப் பதிவுகளே மனிதன் தன்மை

சிந்திப்பீர் ! இதனைவிட வேறு நீயார்?

செயல் எண்ணம் பழக்கவழி ஓடும் மட்டும்

சிற்றறிவாய் துன்புற்று வருந்தும் சீவன்

செயல் எண்ணம் இரண்டினிலும் விழிப்பு கொண்டால்

சிவத்தன்மை சீவனில் பேரறிவாய் ஓங்கும்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!