ஆகஸ்ட் 01 : இயற்கைச் சக்திக்கு உதவுவோம்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.


இயற்கைச் சக்திக்கு உதவுவோம்:

“உடலை நலத்தோடு வைத்துக் கொள்ள வேண்டுமாயின் உடலுக்கும் உயிர்ச்சக்திக்கும் இடையே உள்ள இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் ஊறுநேராதபடி பாதுகாத்துக் கொள்வது அவசியம் ஆகிறது. இயற்கைச் சக்திகளின் விளைவாலோ அல்லது ஐம்புலன்களின் விளைவாலோ இரத்தம், வெப்பம், காற்று ஆகிய மூன்றுக்கும் சீர்குலைவு ஏற்படுகின்றது.

உணவு, உறக்கம், உழைப்பு, பால் உறவு இவற்றை மிகையாகப் பயன்படுத்துவதாலும், தவறாகப் பயன்படுத்துவதாலும், புறக்கணிப்பதாலும், சிந்தனையோட்டத்தை அவ்வாறு பயன்படுத்துவதாலும், நமது செயல்களின் விளைவாகத் தொந்தரவுகள் நேரலாம். பருவ வேறுபாடு, பரம்பரை உணர்ச்சிப் பதிவு, வானில் கோள்களின் ஓட்டத்தில் ஏற்படும் நிலைமாற்றம் இவற்றால் உண்டாகும் காந்த அலை அதிர்வுகள், அவற்றின் சேர்க்கையின் விளைவுகள் இவை இயற்கைச் சக்தியால் நேரும் பாதிப்புகள் ஆகும்.

இந்த விளைவுகளிலிருந்து காக்க இயற்கை சில தடுப்பு வசதிகளைச் செய்து வைத்திருக்கிறது. இந்தத் தடுப்பு வசதிகளையும் கடந்து போகும் நிலை உண்டானால் உடல் கெடுகிறது. பாதிப்புகள் ஏற்படுவதைக் கூடுமான வரை நமது செயல்களால் நாம் தடுத்துக் கொள்ள முடியும். சில சமயங்களில் சந்தர்ப்பவசத்தால் நாம் செயல்படும் பொழுது, தடுப்பு நிலையை நாம் கடந்து விடுகிறோம். இயற்கைச் சக்திகளால் ஏற்படும் விளைவுகளைத் தடுத்துக் கொள்வது சாத்தியம் அன்று. அதனால் தடுப்பு நிலையை உயர்த்திக் கொள்ள நாம் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.


அப்படிச் செய்வதனால் நாம் அறிய முடியாத நிலையில் ஏற்படும் இயற்கைச் சக்திகளின் விளைவுகளையும் நாம் செய்த தவறுகளால் ஏற்படும் விளைவுகளையும் தடுப்பு நிலையை உயர்த்தி, உடல் நலக்கேடு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதைப் பல நூற்றாண்டுக்கு முன்பே மனிதன் தெரிந்து கொண்டிருக்கிறான். தவிர்க்க முடியாத காரணங்களால், தான் நோய்வாய்ப்பட நேர்ந்தால் இயற்கைச் சக்திக்கு உதவுவதன் மூலம் நோயை விரைவிலும், வெற்றிகரமாகவும் குணப்படுத்திக் கொண்டு, உடல் நலத்தை விரைவில் பெற்றுவிடலாம்.”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

* * * * * * * * * * * * * * * * *

தன் நிலை :

“இயற்கையின் ஆதிநிலை பிரம்மம் ஆகும்

எண்ணும், இரசிக்கும் நிலையில் இதே அறிவாம்;

இயற்கையினை – ஈசன், உலகம், உயிர்கள்

எனப் பிரித்துப் பேசிடினும் பொருத்தமேதான்;

இயற்கையின் உச்ச நிலையாக உள்ள

எண்ணத்தைப் பண்படுத்தி நுணுகி ஆய்ந்தால்

இயற்கை, அறிவு இரண்டும் ஒன்றாய்க்காணும்

இதுவே தன்னிலை விளக்கம் அறிந்து சொன்னேன்”.

விதி மதி :

“இயற்கையதன் நிகழ்ச்சிகளை விதி என்கிறோம்.

எண்ணத்தின் செயல்வகையை மதி என்கின்றோம்.

இயற்கை நிகழ்ச்சிகள் பஞ்சு, இரும்பு என்றால்

இவை மதியால் ஆடை, ஆயுதங்களாச்சு.

இயற்கையினை அறிந்த அளவறிவின் மேன்மை,

இதையறிந்தால் விதிமதியின் குழப்பம் போகும்.

இயற்கையின்றி எந்நிகழ்ச்சி உண்டு சொல்வீர்

எண்ணமின்றேல் இயற்கைக்குச் சிறப்பே ஏது?”

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

– தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.Like it? Please Spread the word!